சினிமா செய்திகள்

தாராள பிரபு படக்குழு முடிவு – விநியோகஸ்தர்கள் திரையரங்கினர் அதிர்ச்சி

மார்ச் 13 ஆம் தேதி வெளியான படம் தாராள பிரபு.அப்படம் வெளியான சில நாட்களில் திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. அதனால், திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்த ‘தாராள பிரபு’ படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ‘தாராள பிரபு’ படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண், மார்ச் 17 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில்…..

இன்று உலகையே கரோனா வைரஸ் (CoVid-19) பாதிப்பு ஸ்தம்பித்துப் போகச் செய்திருக்கிறது. தற்போதைய சூழலில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கும் வகையில் நம் நாடு, உலக அளவில் அரசாங்க அமைப்புகள் எடுத்து வரும் முயற்சிகள் பெரிதும் பாராட்டுதலுக்குரியது.

கடந்த வாரத்தில் வெளியாகி, உங்களது பேராதரவைப் பெற்ற எங்கள் ‘தாராள பிரபு’ திரைப்படத்தின் திரையிடல் அரசாணைகளுக்கு இணங்க, மார்ச் 31-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

எங்களது ‘தாராள பிரபு’ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்து வந்த போற்றுதலுக்குரிய அன்பிற்கும் ஆதரவுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த இக்கட்டான சூழலைக் கடந்த பின், அதன் மறுவெளியீட்டின்போதும், உங்களது மேலான ஆதரவை எதிர்நோக்குகிறோம். அனைவரும் பாதுகாப்புடன் இருக்க இறையருள் துணை நிற்கட்டும்.

இவ்வாறு ஹரிஷ் கல்யாண் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பொன்றில் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல், தாராளபிரபு படம் இணையவெளியில் காணக்கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டுள்ளது.

இதனால் திரையரங்குக்காரர்களும் விநியோகஸ்தர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இணைய வெளீயில் படத்தை வெளீயிட்டுவிட்டால் மீண்டும் திரையரங்குகளில் படத்தை வெளியிட முடியாது என்றும் சொல்கின்றனர்.

Related Posts