சினிமா செய்திகள்

கமல் ஒரு மகாநடிகன் நடமாடும் பல்கலைக்கழகம் – ரஜினி புகழாரம்

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா மற்றும் அவரது 60 ஆண்டு கால கலைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ‘உங்கள் நான்’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சி நேற்று (நவம்பர் 17) மாலை நடந்தது.

விழாவின் சிறப்பம்சமாக இளையராஜாவின் இசைக்கச்சேரி நடந்தது.இளையராஜாவுடன் இணைந்து நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய திரைப்படப் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், சரத்குமார், பிரபு, சத்யராஜ், பார்த்திபன், விஜய் சேதுபதி, கார்த்தி, ஜெயம் ரவி, வடிவேலு, விக்ரம் பிரபு, நடிகைகள் லதா, ஸ்ரீபிரியா, மீனா, ரேகா, ராதா, அம்பிகா, மனிஷா கொய்ராலா, தமன்னா, லிசி, குட்டி பத்மினி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், சேரன், அமீர் உள்பட பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது…..

இந்தியாவில் கமல்ஹாசன் போல சினிமாவில் பன்முகத் திறமையை வெளிக்காட்டி வர முடியாது. 60 ஆண்டு கலைப் பயணம் சாதாரண விஷயமல்ல. அவர் செய்த தியாகங்கள் ஏராளம். நானும் கூலியாகக் கஷ்டப்பட்டிருக்கிறேன். ஆனால் அது எல்லாம் கமல்ஹாசன் பட்ட கஷ்டங்களை ஒப்பிடுகையில் சாதாரணம்.

ஒரு கவுரவமிக்க குடும்பம் கமல்ஹாசனுடையது. ஆனால் அதையெல்லாம் விட்டு சினிமாவில் அவர் சாதித்துள்ளார். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் கமல்ஹாசன் நடிப்பைப் பார்த்திருக்கிறேன். அந்தப் பையன் என்னமா நடிக்கிறான் என்று என்னிடம் பலர் சொல்ல, ‘டூரிங் டாக்கீஸ்’ சென்று பார்த்தேன். அந்தக் குழந்தையுடன், படம் பார்த்த இந்தக் குழந்தையும் வளர்ந்து படத்திலும் இணைந்தது அதிசயம்.

கமல்ஹாசன் நடிப்பை என்னவென்று சொல்வது? அவரது நடிப்பைப் பார்த்து சந்தோஷம் அடைந்திருக்கிறேன். வியந்து பிரமித்திருக்கிறேன். ஏன் பல நேரங்களில் பொறாமை கூடப் பட்டிருக்கிறேன். கமல்ஹாசன் நடித்தபோது ஒரு சீனில் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. ஒரு துணியை எடுத்து காயத்தைக் கட்டி 10 நிமிடங்களில் நடிக்க வந்தார். அவர் மகா நடிகன். நடமாடும் பல்கலைக்கழகம். எங்கெங்கு எந்த விஷயம் கிடைத்தாலும் ஆராய்ந்து எடுப்பார்.

ஆராய்ந்த விஷயத்தை மக்களுக்குச் சொல்ல நினைப்பார். ஆனால் அவரது பேச்சு புரியவில்லை என்கிறார்கள். தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குபவர்கள் போல நடிப்பவர்களை என்ன சொல்வது?. இந்த ரஜினிக்கே அது புரியும்போது எல்லாருக்குமே புரியும். தெரியாதவர்கள் போல நடிப்பவர்களை நாம் ஒன்றுமே செய்ய முடியாது.

எங்களது நட்பை யாராலும் பிரிக்க முடியாது. கருத்து, சித்தாந்தம் மாறலாம். ஆனால் நட்பு மாறாது. எங்களைப் பயன்படுத்தி அவரவர் கருத்துகளைத் திணித்து எங்களைப் பிரிக்க முடியாது. படங்களுக்காகக் கொள்கைகளை மாற்றிக்கொண்டது இல்லை. அவர் நீண்ட நாள் வாழ வேண்டும். இந்த நட்பை ரசிகர்களும் காப்பாற்ற வேண்டும். அன்பை விதையுங்கள்.

2 ஆண்டுகளுக்கு முன்பு முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். 4 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று அனைவருமே சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்தது.

நேற்று அதிசயம் நடந்தது. இன்றும் அதிசயம் நடக்கிறது. நாளையும் நிச்சயம் அதிசயம் நடக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts