தனித்துவமும் சவாலான வேடங்களும் அவர் பலம் – அதர்வாவைப் புகழும் இயக்குநர்
குடும்ப உறவுகளுடன் அழகான காதல் கதைகளை இணைப்பதில் இயக்குநர் ஆர்.கண்ணனின் திறமை ஜெயம் கொண்டான் மற்றும் கண்டேன் காதலை போன்ற படங்களில் மிகச்சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.
அவரது சமீபத்திய திரைப்படங்கள் முற்றிலும் தீவிரமான மற்றும் சிக்கலான கருப்பொருள் பின்னணியை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றிலிருந்து சற்று விடுபட்டு குடும்ப கூறுகளுடன் கூடிய அழகான, புத்துணர்ச்சியூட்டும் காதல் கதைகளுக்கு திரும்புகிறார்.
இது குறித்து இயக்குநர் கண்ணன் கூறும்போது,
“ஆம், பார்வையாளர்களுக்கு இடைவிடாமல் தீவிரமான மற்றும் சிக்கலான கதைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன, அதில் எனது படங்களும் அடங்கும் என்பதை நான் உணர்ந்தேன். இந்த மண்டலத்திலிருந்து விலகி ஒரு காதல் கதையைக் கொடுக்க விரும்பினேன். இதே எண்ணம் அதர்வா முரளிக்கும் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
அழகான நடிகராக பாராட்டப்பட்ட அவரின் கதாபாத்திரங்கள், பெரும்பாலும் தனித்துவமான மற்றும் சவாலானவையாகவே இருந்துள்ளன, எங்களின் கடைசிப் படமான ‘பூமராங்’ உட்பட. இருப்பினும், இந்தப் படம் அவரை ஒரு இளமையான கதாபாத்திரத்தில் சித்தரிக்கும். அவர் பிஎச்டி மாணவராக நடிக்கிறார்.
நாயகியாக நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன் குறித்து இயக்குநர் கண்ணன் கூறும்போது, “அவர் பரத நாட்டியத்தில் ஈர்க்கப்பட்ட ஒரு மருத்துவ மாணவியாக நடிக்கிறார். நாங்கள் உண்மையில் கண்களால் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஒரு நடிகையை விரும்பினோம். எல்லாவற்றிற்கும் மேலாக, அதர்வா மற்றும் அனுபமா இருவரையும் ஒன்றாக ஒரு ஃபிரேமில் கற்பனை செய்து பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறது. இந்தப் படம் குடும்ப உணர்வுகளைக் கொண்ட ஒரு ஜாலியான படமாக இருக்கும்” என்றார்.
‘96’ படத்தில் காட்சி மொழி மூலம் நம் மனதை ஈர்த்த சண்முக சுந்தரம் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதுகிறார்.
ஆர்.கண்ணன் எழுதி, இயக்குவதோடு எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 முதல் சென்னையில் தொடங்கப்பட உள்ளது. மேலும் வெளிநாட்டில் மிகவும் அழகான இடங்களில் ஒரு பகுதியைப் படமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.











