விமர்சனம்

குடிமகன் – திரைப்பட விமர்சனம்

நல்லா இருந்த ஒரு ஊரும் அதில் இருக்கும் ஓர் அழகான குடும்பமும் மதுவால் எப்படிச் சீரழிகிறது? என்பதை பொட்டிலடித்தாற்போல எடுத்துச் சொல்லும் படம்தான் குடிமகன்.

விவசாயத்தை அடிப்படைத் தொழிலகக் கொண்ட ஒரு அழகான கிராமத்துக்கு அரசியல்வாதிகளின் பணத்தாசை காரணமாக மதுபானக்கடை வருகிறது.

அதை விரட்டப் போராடியும் முடியவில்லை. மாறாக ஊரே குடிக்கு அடிமையாகிறது. முடிவு என்ன என்பதைச் சொல்வதுதான் படம்.

கந்தன் எனும் வேடத்தில் நாயகனாக ஜெய்குமார் நடித்திருக்கிறார். இவர் கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானத்தின் பேரனாம்.

முதலில் நல்ல குடிமகன் அடுத்து குடிகார மகன் ஆகிய இரண்டுவிதமான பாத்திரங்களிலும் பொருந்துகிறார்.

செல்லக்கண்ணுவாக நடித்திருக்கும் “ஈரநிலம்” ஜெனிபர் நன்றாக நடித்துப் பாராட்டுப் பெறுகிறார். கணவன் மற்றும் குடும்ப நிலை கண்டு அவர் கலங்கி நிற்கும்போது அய்யோவென்றிருக்கிறது.

ஜெய்குமார் ஜெனிபர் தம்பதியின் மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் ஆகாஷ் நல்ல தேர்வு. படம் அவரிடம் தொடங்கி அவரிடமே முடிகிறது. அந்த அளவுக்கு முக்கியமான வேடம். அழகாக நடித்து கலங்க வைக்கிறான் ஆகாஷ்.

ஊர்த்தலைவராக எழுத்தாளர் பவா செல்லதுரை, வீரசமர்,கிருஷ்ணமூர்த்தி, கிரண், பாலாசிங்,
பாவா லெட்சுமணன் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேடங்களுக்கு நியாயமாக இருக்கிறார்கள்.

சி.டி.அருள் செல்வன் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான அளவு இருக்கிறது.

எஸ்.எம்.பிரசாந்த் இசை உறுத்தாமல் இருக்கிறது.

படத்தொகுப்பாளர் கே.ஆர்.செல்வராஜ் இன்னும் கூடுதலாக உழைத்திருக்க வேண்டும்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் சத்தீஷ்வரன் சிந்தனை சிறப்பு.

பள்ளிக்கு ஐந்து நிமிடத்தில் போய்விடலாம் என்கிற வாய்ப்பு இருந்தும் மகனைத் தோளில் சுமந்து கொண்டு அரைமணி நேரம் நடக்கும் அப்பா. அதற்கு, அவனோடு உரையாட நல்வாய்ப்பு என்று காரணம் சொல்கிறார்.

கிராமத்துத் தேநீர்க்கடையில் பேசப்படுகிற அரசியல், கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தி சுபாவம், வீரசமரின் வேடத்தை வைத்துக்கொண்டு நாட்டுநடப்பைப் புட்டு வைக்கும் பாங்கு ஆகியனவற்றில் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் சத்தீஷ்வரன். அதிலும் கடைசிக்காட்சியில் சிறுவன் ஆகாஷ் மதுக்கடையைப் பார்க்கும் பார்வை சிலிர்க்க வைக்கிறது.

கதையிலும் கருத்திலும் இருக்கும் வேகத்தை திரைக்கதையிலும் வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

Related Posts