நெடுநல்வாடை – திரைப்பட விமர்சனம்
அப்பன் சொத்தில் மகளுக்கும் பங்குண்டு என்று சட்டம் இருந்தாலும் சமூகத்தில் அது நடைமுறைக்கு வரவில்லை. இதனால் நாட்டில் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
அப்படி ஒரு நிகழ்வை அடிப்படையாக வைத்துக் கொண்டு இரத்தமும் சதையுமாக ஒரு வாழ்வைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் செல்வகண்ணன்.
ஒரு மகன் ஒரு மகள் கொண்ட குடும்பத்தலைவர் பூஇராமு. மனைவியை இழந்தவர்.
தம் விருப்பத்தை மீறி மகள் காதல் திருமணம் செய்துகொண்டு போய்விட மகன் குடும்பத்துடன் இருந்து விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்.
ஒருநாள், பையன் நடந்து வர பெண்ணை இடுப்பில் வைத்துக்கொண்டு தந்தை வீடு வந்து சேருகிறார் மகள் செந்தி.
கணவனோடு வாழ முடியாமல் வந்த அவரை பூஇராமுவின் மகன் மைம்கோபி நிராகரிக்க, அவள் என் பெண் நான் அவளுக்கு ஆதரவாக இருப்பேன் என்கிறார் பூஇராமு. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படம்.
படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தம் தந்தையையோ தாத்தாவையோ நினைத்துக்கொண்டேயாக வேண்டும் என்கிற கட்டாயத்தைத் தன் நடிப்பால் உருவாக்கிவிட்டார் பூஇராமு. ஒரு மில்லிமீட்டர் கூட மிகையில்லாத அவர் நடிப்பு படத்தின் முதுகெலும்பு.
பூ இராமுவின் பேரனாக நடித்திருக்கும் புதுவரவு இளங்கோவும் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். குடும்பப்பாசத்துக்கும் காதல் உணர்வுக்கும் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் நேரத்தில் ஜொலிக்கிறார்.
நாயகி அஞ்சலிநாயர் புதுமுகம் என்று சத்தியம் செய்தாலும் நம்பமுடியவில்லை. கிராமத்துப் பெண்களின் உற்சாகம் உழைப்பு துடிப்பு துறுதுறுப்பு கோபம் ஆகிய எல்லாவற்றையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
பூஇராமுவும் அவரும் சந்தித்துக்கொள்ளும் காட்சி தமிழ்ச்சமூகத்தின் பெருமையைப் பறைசாற்றும் காட்சி. தத்ரூபமாக நடித்து கலங்கவைத்திருக்கிறார் அஞ்சலிநாயர்.
பூஇராமுவின் நண்பராக நடித்திருக்கும் இயக்குநர் ஐந்துகோவிலான், நாயகியின் அண்ணனாக நடித்திருக்கும் அஜய்நடராஜ், பூஇராமுவின் மகனாக நடித்திருக்கும் மைம்கோபி, மகள் செந்தி ஆகியோரும் மிகப்பொருத்தம்.
வினோத்ரத்தினசாமியின் ஒளிப்பதிவு சிறப்பு. கதையில் சோகம் இருந்தாலும் காட்சிகளில் சுகம் கொடுத்திருக்கிறார்.
ஜோஸ்ஃபிராங்க்ளின் எனும் புதியவர் இசையமைத்திருக்கிறார். கனமான படத்தை அவர் தாங்கியிருப்பது வியப்பு. வைரமுத்துவின் பாடல்கள் நன்று. ஸ்வேதாமோகனின் குரலில் வருகிற ஏதோ ஆகிப்போச்சு பாடல் மயிலிறகு.
மு.காசிவிஸ்வநாதனின் படத்தொகுப்பு மிக அழகு. கதைக்குத் தேவையான காட்சிகளில் இருக்கும் போதாமையை தன் தொகுப்பால் மறைத்து படத்தைக் காப்பாற்றியிருக்கிறார்.
மனைவி குழந்தைகளைத் தவிக்க விட்டுப் போகும் கணவனை கம்யூனிஸ்ட் என்று சொல்வது இப்படத்தில் உள்ள ஒரே குறை.
அதைத்தாண்டி தமிழ்ச்சமுதாயத்தில் குடும்ப உறவுகளின் மேன்மை அறம் ஆகியனவற்றோடு மிகச்சிறந்த வாழ்க்கைமுறையையும் அழகாகக் கோர்த்து இயக்குநர் செல்வகண்ணன் அமைத்திருக்கும் திரைக்கதை மிகநன்று.
திருநெல்வேலி வட்டார வழக்கு வசனங்கள் ஈர்க்கின்றன. படத்தின் சிறப்புக்கு அதுவும் ஒரு காரணம்.
நெடுநல்வாடை – காவியம்











