பாகுபலி 2 வுக்குப் பிறகு ராஜமெளலி இயக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2015 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி பாகுபலி 1 படம் வெளியானது.2017 ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 படம் வெளியானது.
இவ்விரு படங்களின் பெரிய வெற்றியால் தமிழகத்திலும் புகழ்பெற்றிருப்பவர் இயக்குநர் ராஜமௌலி.
அவர் இயக்கத்தில்,தெலுங்கின் முன்னணி நடிகர்கள் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரையும் வைத்து ‘ஆர்.ஆர்.ஆர்’ என்கிற படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார் ராஜமெளலி.
சுமார் 400 கோடி வரை செலவு பிடிக்கும் இந்தப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகவிருக்கிறது. இந்தப் படம் 2020 ஜூலை 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் மார்ச் 14 அன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் டிவிவி தானய்யா, படத்தின் நாயகர்கள் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் ராஜமௌலி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தச் சந்திப்பில் இயக்குநர் ராஜமௌலி பேசியதாவது…..
இப்படம் விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றிய கதை. 1898 இல் பிறந்தவர் அல்லூரி சீதாராம ராஜூ, 1901 இல் பிறந்தவர் கோமரம் பீம். இருவருமே ஒரே மாதிரியான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவர்கள்.
இளம் வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறிய இவர்கள் இருவரும், வீட்டைவிட்டுப் பிரிந்திருந்த காலகட்டத்தில் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? எங்கே வாழ்ந்திருந்தார்கள் என்பன உட்பட எந்தத் தகவலும் இதுவரை யாருக்குமே தெரியாது.
ஆனால், இருவருமே திரும்பவும் ஊருக்குள் வந்து, பழங்குடி மக்களின் நலனுக்காக, சுதந்திரத்துக்காகப் போராடினார்கள். கொரில்லா வகைத் தாக்குதல், காவல் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்றுவது, மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டுவது என செயல்பட்டார்கள். இவை எல்லாம் அந்த இருவரைப் பற்றிய நமக்கு தெரிந்த விஷயங்கள். இருவருமே ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர்.
இவர்களுடைய வீர தீர வரலாற்றைப் படிக்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு பேருமே ஒரே காலகட்டத்தில் பிறந்தது, ஒரே வயதில் வீட்டைவிட்டு வெளியேறியது, எங்கு சென்றார்கள்? என்ன செய்தார்கள்? என்பது வெளியில் தெரியாத ரகசியம்.
அவர்கள் இருவருமே மீண்டும் ஊருக்குள் வந்து நாட்டுக்காக ஒரே வகையில் போராடியது எல்லாவற்றையும் அறிந்து வியந்தேன். அவர்களைப் பற்றிய மேலும் பல தகவல்களைத் திரட்ட ஆரம்பித்தேன். அந்த இருவரைப் பற்றிய வரலாற்று அடிப்படையில்தான் இந்தக் கதையை அமைத்திருக்கிறேன்.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த இந்த மாவீரர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்காமலே இருப்பது, அவர்களின் போராட்டத்துக்கான மூலக்காரணம், இருவரும் நட்பாக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பது போன்று திரைக்கதை அமைத்திருக்கிறேன்.
இந்தக் கதையை விரிவான காட்சிபூர்வ வடிவமாக்கி மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப் போகிறோம். எனக்கு எப்போதும் எதுவுமே சிறியதாக இருந்தால் பிடிக்காது. எல்லாவற்றையும் பிரம்மாண்டமாகத்தான் யோசிப்பேன். இந்தப் படத்தையும் பிரம்மாண்டமாகத்தான் எடுக்கவுள்ளேன்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் நடக்கும் கதை என்பதால் அந்தக் கால மக்களுடைய கலாச்சாரம், மொழி, நடை, உடை, நாட்டு நடப்பு ஆகிய பலவற்றைப் பற்றியும் நிறைய ஆய்வுகள் மேற்கொண்டோம். இதனால்தான் படத்தின் தயாரிப்பு தாமதமாகத் தொடங்குகிறது.
கிராஃபிக்ஸ் பணிகளுக்கென்றே ஆறு மாதங்கள் ஒதுக்கவுள்ளோம். இப்படத்துக்கு இயற்கையான ஒரு தோற்றம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கிராஃபிக்ஸ்ஸைப் பயன்படுத்துகிறேன். படத்தின் பிரம்மாண்டத்துக்காக அல்ல.
அதேபோல, இரண்டு பெரிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் முதன்மை கதாபாத்திரங்களாக இருக்கும்போது துணை கதாபாத்திரங்களிலும் பிரபல நடிகர்கள் தேவைப்பட்டார்கள்.
பாலிவுட் நட்சத்திரம் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் ராம்சரணின் ஜோடியாக அலியா பட் நடிக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக டெய்ஸி எட்கார் ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் நடிகை நடிக்கிறார்.
இயக்குநர் சமுத்திரகனி பேசப்படும் பாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் கதைக்கு முதுகெலும்பாக இருக்கும். இப்படி மிக வலிமையான துணை கதாபாத்திரங்கள் உள்ளனர்
இவ்வாறு ராஜமௌலி கூறியுள்ளார்.











