காதல் முன்னேற்றக் கழகம் இன்னொரு சுப்பிரமணியபுரம்?
ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன் தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்றக் கழகம்.’
இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார்.
இப்படத்துக்கு ஒளிப்பதிவ ஹாரிஸ் கிருஷ்ணன்,இசை பி.சி.சிவன்,
பாடல்கள் யுகபாரதி, மோகன்ராஜ், உமாசுப்ரமணியம், மாணிக்சத்யா ஆகியோர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர்
மாணிக் சத்யா.
படம் பற்றி இயக்குநர் மாணிக் சத்யா பேசும்போது,
இந்தப் படம் 1985 களில் நடக்கின்ற கதை. கதாநாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர்.அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது,இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக இருப்பவர்.
துரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப் படுவது நம்பிக்கை துரோகம் தான்.அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கைத் துரோகம் மிக மிகக் கொடூரமானது.
அதைத் தான் இதில் சொல்லி இருக்கிறோம். யதார்த்தமான கதையாக படம் வந்திருக்கிறது. கிராமப்புற வாழ்வியலைப் பதிவிட்டிருக்கிறோம். படத்தைப் பார்த்த பாண்டியராஜன் சார் பாராட்டியதுடன் 15 நிமிட கிளைமாக்ஸ் காட்சிகள் நெருப்பு மாதிரி இருக்கிறது என்றார்.
இப்படத்துக்கான படப்பிடிப்பு சென்னை, ஊட்டி, கடலூர் மாவட்டம், திட்டக்குடி, விருத்தாசலம், பெரம்பலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்கிறார் இயக்குநர் மாணிக் சத்யா.
இப்படத்தின் புகைப்படங்களைப் பார்க்கும்போது சுப்பிரமணியபுரம் படத்தை நினைவூட்டுகிறது. அப்படம் போல் இப்படமும் வெற்றியடைந்தால் நல்லது.











