விமர்சனம்

மாரி 2 – திரைப்பட விமர்சனம்

கதை என்கிற ஒன்றைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்தினால் போதும் என்கிற எண்ணத்தில் தனுஷ் எடுத்திருக்கும் படம்தான் மாரி 2.

தனுஷின் தோற்றம் மற்றும் நடவடிக்கைகளில் அவர் சென்னையில் பெரிய ரவுடி என்று சொல்கிறார்கள். அவரும் அதற்கேற்ப நடித்துத்தள்ளியிருக்கிறார்.

அவர் கூடவே எப்போதும் இருக்கும் ரோபோசங்கர் மற்றும் வினோத் வருகிற காட்சிகள் ஆறுதல். அவர்கள் செய்யும் கிண்டல் கேலி எள்ளல்கள் சிரிக்கவைக்கின்றன.

நாயகியாக சாய்பல்லவி.புதிதாக அவரைப் பார்ப்பவர்களிடம் மலர் டீச்சராக நடித்தது இவர்தான் என்று சொன்னால் சத்தியமாக நம்பமாட்டார்கள். அந்தளவு துறுதுறுப்பும் துடிப்புமாக ரவ்டி பேபி என்று தனுஷை அவர் கொஞ்சுகிறார். திரையில் இன்னும் கொஞ்சநேரம் இருக்கமாட்டாரா? என்று நினைக்க வைக்கிறார்.

தனுஷின் நண்பராக கிருஷ்ணா, வில்லனாக டோவினோதாமஸ், அரசாங்க அதிகாரியாக வரலட்சுமி உள்ளிட்ட நிறையப் பேர் படத்தில் இருக்கிறார்கள்.

முதல்காட்சியிலேயே மிகச் சக்திவாய்ந்த வில்லனைக் காட்டுவதால், ஆகா ஒரு அட்டகாசமான ஆக்‌ஷன் படம் பார்க்கலாம் என்கிற ஆசையில் அடுத்த காட்சியிலேயே தீ வைத்துவிடுகிறார்கள். அவனை உடனே கொல்லமாட்டேன் என்று ஏதேதோ பேசி எரிச்சல் மூட்டுகிறார் வில்லன் டோவினோ.

அங்கங்கே சிரிப்பு, தனுஷ் சாய்பல்லவியின் சிறப்பான நடனத்தில் வரும் ரவுடி பேபி பாடல் ஆகியனவற்றை வைத்து இடைவேளைவரை நகர்த்திச் செல்கிறார்கள்.

அதன்பின் என்ன செய்வதென்று அவர்களுக்கும் தெரியவில்லை என்ன நடக்கிறதென்று நமக்கும் புரியவில்லை.

நகமும் சதையுமான நண்பன் அவனே நாயகனைப் புரிந்துகொள்ளாமல் எதிரியாவது போன்ற அரதப்பழசான சலிப்பூட்டும் காட்சிகள் மட்டுமின்றி வில்லனை அழிக்க எல்லோரும் ஒன்று சேருவது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல இருக்கிறது.

நண்பர்கள் துரோகிகளாகிறார்கள் துரோகிகள் எதிரிகளாகிறார்கள் எல்லாத்தையும் நான் தாங்குவேன், உன்னையும் முதுகுல குத்திட்டாங்களா? என்பது உட்பட தனுஷின் சுய புலம்பல்கள் வேறு அவ்வப்போது வருகிறது.

தனுஷ் திரையில் வந்தாலே போதும் மற்ற எதுவும் தேவையில்லை என்று இயக்குநர் பாலாஜிமோகன் முடிவு செய்துவிட்டார் போலும். ஒரு கட்டத்துக்கு மேல் தாங்க முடியவில்லை.

செஞ்சிருவேன் செஞ்சிருவேன்னு சொல்லி நல்லா வச்சு செஞ்சிட்டார் தனுஷ்.

Related Posts