விமர்சனம்

சீமத்துரை – திரைப்பட விமர்சனம்

கணவனை இழந்து கருவாடு விற்று மகனைக் கல்லூரியில் படிக்க வைக்கும் அம்மா. அம்மாவின் கஷ்டங்களைக் கொஞ்சம்கூடப் புரிந்துகொள்ளாத மகன், நண்பர்க்ளோடு சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறான்.

அவனுக்குக் காதல் வருகிறது. அதுவும் ஊர் மணியக்காரர் வீட்டுப் பெண் மேல்.

அப்புறமென்ன, மோதல் அடிதடி வெட்டுக்குத்து என்றுதானே போகும். அப்படித்தான் போகிறது. ஆனால் யாருமே எதிரபாராத க்ளைமாக்ஸ் பதற வைக்கிறது.

நாயகன் கீதன், பொறுப்பற்றுச் சுற்றித்திரியும் கல்லூரி மாணவன் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். எல்லாவிதமான காட்சிகளிலும் அசராமல் அடிக்கிறார்.

நாயகி வர்ஷா, அழகுப்பதுமையாக இருக்கிறார். சுவலட்சுமி என்றொருநாயகி இருந்தாரே அவரை நினைவு படுத்துகிறார். அவர் கண் நிறையக் கண்ணீரோடு நிற்கும்போது நமக்கும் கண்கலங்கிறது.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் விஜிசந்திரசேகர் சிறப்பாக நடித்துப் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார். காவல்துறை அதிகாரியின் காலில் விழுந்து கதறும் காட்சி கலங்க வைக்கிறது.

நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் கயல் வின்செண்ட், மகேந்திரன் தேநீர்க்கடைக்காரராக நடித்திருக்கும் பொரி உருண்டை சுரேஷ், நாயகியின் மாமாவாக நடித்திருக்கும் காசிராஜன், வாய் பேச முடியாதவராக நடித்திருக்கும் நிரஞ்சன் ஆகிய எல்லோருமே பொருத்தமாக இருக்கிறார்கள்.

திருஞானசம்பந்தம் ஒளிப்பதிவில் கிராமத்து அழகு சரியாகப் பதிவாகியிருக்கிறது. ஜோஸ்ப்ராங்க்ளின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

எழுதி இயக்கியிருக்கும் சந்தோஷ்தியாகராஜன் ஒரு சின்ன கதையை எடுத்துக்கொண்டு அதற்குப் பொருத்தமாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார்.

க்ளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராதது, ஏற்றுக்கொள்ள முடியாதது.

Related Posts