ரசிகர்களுக்கு சிம்பு திடீர் கடிதம் எதனால்?
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. பொங்கல் வெளியீடு என்று படக்குழு அறிவித்திருக்கிறது. இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், சிம்பு முதலில் விநியோகஸ்தர்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து படக்குழுவினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
இதனால், இப்படத்தின் வெளியீட்டு நேரத்தில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவின. இதனால், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், அதன் தலைவர் விஷாலுக்கும் எதிராக சிம்பு ரசிகர்கள் பலரும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
”எனது ரசிகர்களுக்கும், என்னை நேசிப்பவர்களுக்கும் ஒரு அழுத்தமான வேண்டுகோள். திரைத்துறையில் அண்மையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து வருந்தாதீர்.
எந்த ஒரு தனி நபரின் முடிவும் நம்மை ஓரங்கட்டிவிட முடியாது. எந்த முடிவாக இருந்தாலும், அது குழு உறுப்பினர்களால், கவுன்சில் உறுப்பினர்களால் எடுக்கப்படுவதை நாம் உறுதி செய்வோம். அதனால் பதற்றப்பட வேண்டாம். யாரையும் குறிவைத்து விமர்சிக்க வேண்டாம்.
எப்போதுமே அன்பைப் பரப்புங்கள். உங்களது தொடர் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நாம், நமது கடமையைச் செய்வோம். தானாக வழி பிறக்கும். பொங்கலுக்கு எப்படியும் திரைக்கு வருவோம்”.
இவ்வாறு சிம்பு தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் சிம்பு ரசிகர்கள் விஷாலை விமர்சனம் செய்து கருத்துகள் வெளியிட்டுவந்தனர். அதையொட்டியே சிம்பு இந்தக் கடிதம் எழுதியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.











