விமர்சனம்

சண்டக்கோழி 2 – திரைப்பட விமர்சனம்

ஏழு ஊர் சேர்ந்து நடத்தும் வேட்டைக் கருப்பசாமி கோயில் திருவிழா ஏழாண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது.

ஏழு நாட்கள் நடக்கும் அந்தத் திருவிழாவில் ஒருத்தரைக் கொன்றே தீருவோம் என்கிற வரலட்சுமியின் சபதத்தைச் செயல்படுத்த ஒரு கூட்டம் தீவிரமாக இருக்கிறது.

ஊர்த்தலைவர் ராஜ்கிரணோ வரலட்சுமியின் எண்ணத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்து திருவிழாவையும் நல்லபடியாக நடத்துவேன் என்று உறுதியேற்கிறார்.

இறுதியில் என்ன நடக்கிறது? என்பதுதான் படம்.

ராஜ்கிரண் அதே கெத்தோடு இருக்கிறார். நல்லி எலும்பைக் கடிப்பதும் ஊர் முன்னால் நெஞ்சு நிமிர்த்தி கம்பீரமாக நடப்பதும், விஷாலிடம் ஒரு மகனா என் வாக்கைக் காப்பாத்துங்க என்கிற நேரத்தில் தணிவது என்று எல்லா இடங்களிலும் சிறப்பு.

அப்படியே இருக்காருல்ல என்று விஷாலைப் பார்த்து ராஜ்கிரண் சொல்வார். அப்படியே இருக்கிறார் விஷால்.

தேவையற்ற பரபரப்பு இல்லாமல் அமைதியாக அழுத்தமாக மிகச் சிக்கலான சூழ்நிலைகளைக் கையாளுவதில் தேர்ச்சி பெறுகிறார் விஷால். சண்டைக்காட்சிகளும் நன்று.

படத்தின் உற்சாகத் துள்ளல் கீர்த்திசுரேஷ். ஓடுகிற ஜீப்பில் இருந்தில் ஆலமர விழுதைப் பிடித்து இறங்கும் காட்சியிலேயே அசத்துகிறார். விஷாலுக்கும் அவருக்குமான காட்சிகளில் விஷாலை மட்டுமின்றி ரசிகர்களையும் மிரள வைக்கிறார். விஷால் மீதான காதலை அவர் வெளிப்படுத்தும் காட்சி அழகு.

முரட்டு ஆண்களையே வில்லன்களாகப் பார்த்த ரசிகர்களுக்கு முரட்டுவில்லியாக வந்து வித்தியாசம் காட்டுகிறார் வரலட்சுமி. கண்கள் மற்றும் உடல்மொழியிலேயே மொத்தக் கோபத்தையும் வெளிப்படுத்துகிறார். இவரை ஏன் இந்த வேடத்துக்குத் தேர்ந்தெடுத்தார்கள் என்கிற கேள்விக்கு விடை க்ளைமாக்ஸில் இருக்கிறது.

முனீஸ்காந்த், கஞ்சாகருப்பு, தென்னவன், சண்முகராஜன், ஞானசம்பந்தன், ஹரிஷ்பேரடி உட்பட படத்தில் நிறைய நடிகர்கள்.

யுவனின் இசையில் கம்பத்துப் பொண்ணு, செங்கரட்டான் பாறையிலே ஆகிய பாடல்கள் சுகம்.

சக்திவேலின் ஒளிப்பதிவு, திருவிழாவில் கலந்து கொண்ட உணர்வைப் பார்வையாளர்களுக்கும் கொடுக்கிறது.

செய்யறதுன்னா செய்யறது சொல்றது இல்ல என்று செய்திருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி.

சாதிச் செருக்கை உடைத்து மனிதநேயம் பேசும் கதையை எடுத்துக்கொண்டு அதில், மது புகை இல்லாத காட்சிகள், குடும்பம், காதல், பாசம் ஆகியனவற்றைக் கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார்.

ராஜ்கிரணுக்கு ஏற்படும் அதிர்ச்சிகரமான நிகழ்வு தவிர வேறேதும் திருப்பங்கள் இல்லாத திரைக்கதை சோர்வைத் தருகிறது.

சிசிடிவியில் ராஜ்கிரண் உட்பட ஊரே உட்கார்ந்து ஆக்‌ஷன் படம் பார்ப்பது அப்படியே காதல் படமும் பார்ப்பது போன்ற சுவாரசியமான காட்சிகளுக்கு நடுவே ஏற்கெனவே பார்த்துச் சலித்த காட்சிகள் படம் நெடுக இடம்பெறுகின்றன. ஆனாலும் இறுதியில் சமூகத்துக்கு இயக்குநர் லிங்குசாமி சொல்லும் செய்தி வரவேற்புக்குரியது.

Related Posts