சினிமா செய்திகள்

ரஜினியின் எந்திரன் பட விவகாரம் – ஷங்கருக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் நடித்தப்படம் எந்திரன். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்தப்படத்தின் கதையை ஷங்கர் எழுத சுஜாதா வசனம் எழுதியிருந்தார்.

எந்திரன் பட கதை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபல இதழின் முதன்மை துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர், சிவில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் எந்திரன். இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை அமைப்புகள் அனைத்தும் தன்னுடைய கதை தான், எனவே படத்தின் கதை தன்னுடையது தான் என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். காப்புரிமைச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் ரூ.1 ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது. இயக்குநர் ஷங்கர் தரப்பில் வழக்கு சம்பந்தமாக தங்கள் தரப்பில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம். சுந்தர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இன்று இயக்குநர் ஷங்கர் ஆஜராக வேண்டும், ஆனால் அவர் இன்று நீதிமன்றம் வரவில்லை.

இயக்குநர் ஷங்கர் தரப்பில் அவரின் மேலாளர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் இயக்குனர் ஷங்கர் படப்பிடிப்பு சம்பந்தமாக வெளியூரில் இருப்பதால் வழக்கு விசாரணை தள்ளி வைக்க வேண்டும் என கோரியிருந்தார்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி ஏற்கனவே சாட்சிகள் மற்றும் குறுக்கு விசாரணைகளை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் இன்னும் அதனைத் தொடர கால அவகாசம் கோருவதால் அதனை ஏற்க முடியாது என தெரிவித்தார்.

வணிக நீதிமன்ற சட்டத்தின்படி வழக்கு விசாரணைக்காக கால அவகாசம் கோரும் இயக்குநர் ஷங்கருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதாக தெரிவித்த நீதிபதி அபராதத் தொகையை புளு கிராஸ் (BLUE CROSS) அமைப்பிடம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

பின்னர் வழக்கின் விசாரணை வரும் 12 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இதனால் இயக்குநர் ஷங்கர் அதிர்ச்சியடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Related Posts