60 வயது மாநிறம் – திரைப்பட விமர்சனம்
நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமையாகி, பணம் ,பதவி, மற்றும் ஆடம்பர வாழ்வை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் உறவுகளின் மேன்மையை எடுத்துச் சொல்கிற படம் அறுபது வயது மாநிறம்.
அல்சைமர் எனும் நினைவிழத்தல் குறைபாட்டில் சிக்கிய அப்பாவைத் தொலைத்துவிட்டுத் தேடுகிற அமெரிக்கக் கனவு காணும் மகனை வைத்துக் கொண்டு கதை சொல்கிறார்கள்.
நினைவிழத்தல் குறைபாட்டால் பாதிக்கப்படும் அப்பாவாக நடித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். சில இடங்களில் கலங்க வைக்கிறார். சில இடங்களில் மிகை நடிப்பும் வருகிறது.
இதுவரை ஏற்றிராத பாத்திரம் விக்ரம்பிரபுவுக்கு, அமெரிக்கக் கனவுடன் இருக்கும் அவருக்கு அப்பாவை விட வேலை முக்கியம். அப்பாவைப் பாதுகாப்பாக ஒரு பராமரிப்பு இல்லத்தில் விட்டுவிட்டு மும்பை போகிறார்.திரும்ப வந்து அவரை வெளியில் கூட்டிப்போய்த் தொலைத்து விடுகிறார்.
அப்பாவைத் தொலைத்துவிட்டோம் என்கிற குற்ற உணர்வைப் பல இடங்களில் வெளிப்படுத்துகிறார். அவர் கலங்கி அழும் காட்சிகள் வரவேற்பைப் பெறுகின்றன.
பராமரிப்பு இல்லத்தில் மருத்துவராக இருக்கும் நாயகி சிந்துஜா, விக்ரம்பிரபுவுடன் சேர்ந்து பிரகாஷ்ராஜைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபடுகிறார்.
பிரகாஷ்ராஜின் காதல் வாழ்க்கை இவர்களுடைய காதலுக்கு உரமாகிறது.காதல் என்று சொல்லாமல் கண்களில் மட்டுமே அதை வெளிப்படுத்துவதில் விக்ரம்பிரபு சிந்துஜா ஆகிய இருவருமே நன்று.
காணாமல் போகும் பிரகாஷ்ராஜ், கூலிக்குக் கொலை செய்யும் சமுத்திரக்கனியிடம் சிக்கிக் கொள்கிறார்.அதன்பின் நடக்கும் காட்சிகள் எதிர்பார்த்த மாதிரியே இருந்தாலும் சுவாரசியமாக இருக்கிறது.
உன்னப் பார்த்தா பொறாமையா இருக்குய்யா என்று பிரகாஷ்ராஜிடம் சமுத்திரக்கனி பேசும் காட்சி சிறப்பு.
படத்தின் பெரும்பலம் விஜியின் வசனங்கள்.
போகிற போக்கில் காணாமல் போகிற காட்சியில் கூட,
இந்த மொபைல் நெட்வொர்க் விளம்பரத்தில் மட்டும்தான் வேலை செய்யும் போல என்று தன் இருப்பைப் பதிவு செய்கிறார்.
குமரவேல் வருகிற காட்சிகள் எல்லாம் சிரிப்பால் திரையரங்கு அதிர்கிறது. விஜியின் வசனங்கள் அதற்குக் காரணம்.
பிரதமர் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாதுன்னு சொன்னப்ப அரைமணி நேரம் சிரிச்சேன் என்று சமுதாயச் சிக்கலைச் சொல்வது, நீ சாம்பார் வை அதோட அவங்க ஓடிடுவாங்க என்று மனைவியைக் கேலி செய்வது என எல்லா இடங்களிலும் அடித்து விளையாடியிருக்கிறார்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணி இசை பொருத்தம்.
கன்னடப் படத்தின் மறு ஆக்கம் என்பதால் இயக்குநர் ராதாமோகன் கொஞ்சம் அலட்சியமாகவே கையாண்டிருக்கிறார் போலும்.
உடனிருக்கும்போது தெரியாத உறவுகளின் மகிமை அதை இழக்கும்போது தெரியும் என்பதைப் பொட்டிலடித்தாற் போல் சொல்லும் கதை. அதற்கான திரைக்கதை அமைப்பு பலவீனமாக இருப்பது சோகம்.
குடும்பத்தோடு பார்க்கிற படங்களின் வரிசையில் சேர்ந்திருக்கும் படம்.











