மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன – திரைப்பட விமர்சனம்
இரவு பனிரெண்டு மணிக்கு அல்ல பகல் பனிரெண்டு மணிக்கே பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத பேரவலத்தைச் சுட்டிக்காட்டும் படம் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன.
தனியாக நடந்துசெல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் நபர்களிடமிருந்து நகை பறிக்கிறார் நாயகன் துருவா. அடடே என்று நிமிர்ந்து உட்காருவதற்குள் அந்த நகை பறிக்கும் கூட்டத்திலேயே சேர்ந்துவிடுகிறார்.
அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து நகை பறிக்கும் வேலைகளில் ஈடுபடும்போது என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் திரைக்கதை.
நாயகன் துருவா அதிரடிக்காட்சியில் அறிமுகமாகிறார்.ஒரு பக்கம் சரியான ஐட்டங்காரனாகவும் இன்னொரு பக்கம் பாசமிகு மகன், கணவன் ஆகிய பாத்திரங்களிலும் நன்றாகச் செய்திருக்கிறார்.
ஐஸ்வர்யாதத்தா, அஞ்சனா ஆகிய இரண்டு நாயகிகள். இருவரில் அஞ்சனா கலங்க வைக்கிறார்.
படத்தின் பெரியபலம் சரண்யாபொன்வண்ணன். அன்பான அம்மா. அவர் மகனுக்காகப் பெண் பார்க்கும் அழகே அழகு.
மைம்கோபி, ராம், அருள்தாஸ், ராதாரவி என்று விரியும் நிழலுலகம் பதற வைக்கிறது.
ஜேடி சக்ரவர்த்திக்குப் பொருத்தமான வேடம். தன் அலட்சியமான நடிப்பால் வேடத்துக்குப் பெருமை சேர்க்கிறார்.
பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவில் நகை பறிப்புக் காட்சிகள் பயமுறுத்துகின்றன.
அச்சுவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.
குடும்பப்பாசம், காதல் ஆகியனவற்றைக் கலந்து சமுதாயத்துக்குத் தேவையான விசயத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
அதற்கான அவர் உழைப்பு உண்மையான திருடர்களுக்குப் பயன்படுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.
பெரிய நகைக்கடையில் விற்கப்படுகிற நகை எங்கெங்கு சுற்றி கடைசியில் எங்கு வந்து சேருகிறது என்பதைப் பார்க்க பிரபிப்பாக இருக்கிறது. யாரை நம்பி என்ன செய்வது? என்கிற பயமும் வருகிறது.
நாட்டின் பொருளாதாரம், பெண்களின் பெருவிருப்பம் ஆகிய பெருமைகளுக்குரிய தங்கத்தை வைத்தே பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திருக்கும் இயக்குநர் ராகேஷ் பாராட்டுக்குரியவர்.











