சினிமா செய்திகள் நடிகை

ஶ்ரீரெட்டி பற்றி கஸ்தூரி கருத்து – கிளம்பும் புதிய சர்ச்சைகள்

தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி, தமிழ்த் திரையுலகில் உள்ளவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி. தமிழ் நடிகைகள் பற்றி அவர் பேசியபோதும் பெரிதாக யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை . இப்போது. நடிகை கஸ்தூரி இதுபற்றிப் பேசியுள்ளார்.

ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்றுதான் ஸ்ரீரெட்டியின் இணையதளப் பேட்டியைப் பார்த்தேன். சினிமா ஆசைகாட்டி, தங்கள் ஈன புத்திக்குப் பெண்களை இரையாக்கிக் கொள்ளும் ஓநாய்களின் முகத்திரையை கிழித்து தொங்கப்போட்டுக் கொண்டிருக்கிறார். மானாவாரியாக பெயர்களை இறைக்கிறார். இவர் கூடவா என்று சிலர் பெயரைக் கேட்டதும் அதிர்ச்சியாக உள்ளது. ஆனால், அவர் சொல்லும் விவரங்கள் நம்பும்படியாக உள்ளன.

ஸ்ரீரெட்டியின் நிலை நமக்கு உணர்த்துவது இதைத்தான். லஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம். கொடுப்பதே லஞ்சம், இதில் கொடுத்த லஞ்சத்துக்கு வாங்கியவர்கள் உண்மையாக இல்லை என்று பிறகு கூப்பாடு போடுவது…

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் இல்லையா? அதிலும், ஒரு ஊரில் பல பேரிடம் ஏமாந்து, பிறகு அடுத்த ஊரிலும் அதே தவறையே மறுபடி மறுபடி செய்வதற்குப் பெயர் என்ன?

குறுக்கு வழி, ஏமாற்றம் நிறைந்தது. அதில் பலமுறை பயணித்திருக்கிறார் இவர். ஒருமுறைகூட அந்த வழி பயன் தரவில்லை. அப்புறமும் தன் அணுகுமுறை தவறு என்று ஏன் இந்தப் பெண் உணரவில்லை?

அப்படியென்றால், சினிமாவுக்குத் தேவையான தகுதியோ, திறமையோ தனக்கு இல்லை, சமரசங்கள் செய்தாலாவது வாய்ப்பு கிட்டாதா என்று அந்தப் பெண் யோசித்ததாகவே தெரிகிறது. தகுதிக்கு மேல் பேராசைப்பட, சமரசம் செய்யக்கூட ஒரு மனநிலை வேண்டும். எல்லோருக்கும் அது கை கூடாது.

திருடித் தின்பது சுலபமென்றால், எல்லோரும் திருடர்களாகத்தான் இருப்பார்கள். நேர்வழிதான் கடைசியில் நிலைக்கும் என்பதை, பட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. நம் முன்னோர்கள் நமக்கு அதைச் சொல்லித்தந்து போயிருக்கிறார்கள். அந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் ஜாக்பாட் அடிக்காமல் போகலாம். ஆனால், என்றும் சீராக, இழப்பில்லாமல் செல்லும்.

ஸ்ரீரெட்டி செய்த மிகப்பெரிய தவறு என்ன என்று, அவர் இன்றுவரை உணர்ந்தாரா எனத் தெரியவில்லை. அவர் சினிமாவில் உள்ள ஆண்களைத் தவறாக எடைபோட்டு, ஏமாந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார். இல்லை, அவர் தவறாக எடைபோட்டது சினிமாவில் உள்ள பெண்களைத்தான். எல்லா நடிகைகளும் இயக்குநர்கள், நடிகர்களுக்கு இணங்கிதான் சினிமாவில் முன்னேறியுள்ளார்கள் என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டார். சான்ஸ் கிடைத்திருந்தால் யார் முகத்திரையையும் கிழித்திருக்க மாட்டார். சினிமாவை மிகத் தவறாக எடைபோட்டதன் விளைவையே இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறார் .

இணங்கினால்தான் சான்ஸ் கிடைக்கும் என்று அவர் நினைத்தது மிகப்பெரிய முட்டாள்தனம் மட்டுமல்ல, திறமையையும் உழைப்பையும் ஒழுக்கத்தையும் மூலதனமாக வைத்து முன்னேறிய என்னைப் போன்ற நடிகைகளுக்கு எவ்வளவு அவதூறு… சினிமாவில் நிறைய நல்லவர்கள் உள்ளார்கள். அவர்கள் யாரையும் இப்பெண் சந்திக்கவேயில்லையா?

இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.

பின்பகுதியில் ஶ்ரீரெட்டியை அவர் விமர்சித்தாலும் தொடக்கத்தில் இவருமா? என்ற ஆச்சரியமும்,ஸ்ரீரெட்டி சொல்வது நம்பும்படி உள்ளது என்று சொல்லியிருப்பதும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கின்றன.

Related Posts