Uncategorized விமர்சனம்

ஆந்திரா மெஸ் – திரைப்பட விமர்சனம்

ஆண்களின் இயக்கம் எல்லாம் பெண்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதை பல நிகழ்வுகளின் மூலம் சொல்லியிருக்கும் படம் ஆந்திரா மெஸ்.

உன்னால மீனுக்கு பொறி கூட வாங்கிப்போட முடியாது என்று காதலிக்கும் பெண் சொன்ன ஆந்திரத்தில் வரதுவாக நடித்திருக்கும் ஏ.பி.ஶ்ரீதர் எடுக்கும் முடிவால், அவர் உட்பட ராஜ்பரத்,மதி,பாலாஜி ஆகிய நான்கு பேரின் வாழ்க்கை திசை மாறுகிறது. ஊரை விட்டே போகிறார்கள்.

போன இடத்தில் ஜமீனின் துணைவியுடன் ராஜ்பரத்தின் காதல்,மதி, பூஜா தேவரியா காதல் ஆகியன அவர்கள் வாழ்க்கையை வேறு திசைக்கு மாற்றுகிறது.

ஒவ்வொரு வேடத்துக்கும் தனித்தனி அறிமுகம் என்று சோதிக்காமல் திரைக்கதையின் ஓட்டத்திலேயே ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்கிறார் இயக்குநர் ஜெய்.

முதல்படம் போலத் தெரியாமல் தேர்ந்த நடிகர் போல் நடித்திருக்கிறார் ஏ.பி.ஶ்ரீதர், ராஜ்பரத் காதல், கோபம் ஆகிய உணர்ச்சிகளை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். ம்தி, பாலாஜி ஆகியோரும் பொருத்தமாக இருக்கிறார்கள்.

படத்தின் பெரும்பலம் தேஜஸ்வினியின் பாத்திரப்படைப்பும் அவருடைய நடிப்பும். அரபுக்குதிரை போலத் தோற்றம், அலட்சியப் பார்வை, அன்புக்கு ஏங்கும் தவிப்பு என வேடத்துக்கும் படத்துக்கும் பலம் சேர்த்திருக்கிறார்.

என் மனசுக்குப் பிடிச்ச ஒருத்தன் வருவான் என்கிற நம்பிக்கையில் வாழ்கிறேன் என்று தேஜஸ்வினி சொல்வது அவருடைய குரல் மட்டுமல்ல பெரும்பான்மை பெண் குரல்.

வில்லன் தேவராஜ், ஜமீன் ஆகியோர் தங்கள் நடிப்பால் ரசிக்க வைக்கிறார்கள்.மதுக்குடிக்கும் இடத்தை அலங்காரம் செய்து , இதுதான் ரசனை என்று கொண்டாடுவதும்,குடி தப்பு குடிக்கிறவனை பிடிக்காது என்று சொல்பவன் பொய்யானவன் என்று அசால்ட்டாக அடித்துவிடும் ஜமீன் கைதட்டல் பெறுகிறார்.

எல்லாத் திருடர்களும் இவர்கள் எடுக்கும் முடிவை எடுத்தால் நாடு தொழில்வளம் பெருகி நன்றாக இருக்கும்.

முகேஷின் ஒளிப்பதிவும் பிரஷாந்த் பிள்ளையின் பின்னணி இசையும் படத்தைக்குப் பலம்.

கொள்ளையனிடம் கொள்ளையடிக்கும் நான்கு பேரை வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஆண் மற்றும் ஒவ்வொரு பெண்ணின் உணர்வுகளைச் சொல்லும் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஜெய். வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.

தமிழ்த்திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநராக ஜெய்யும் குறிப்பிடத்தக்க படமாக ஆந்திரா மெஸ் படமும் இருக்கும்.

Related Posts