சினிமா செய்திகள் நடிகர்

ஜெயிலுக்குப் போகிறார் ஜி.வி.பிரகாஷ்

ஆல்பம்,அங்காடித்தெரு,வெயில்,அரவான்,காவியத்தலைவன் ஆகிய படங்களை இயக்கிய வசந்தபாலன் தற்போது ஜீ.வி.பிரகாஷ் கதை நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

இவர் இயக்கிய வெயில் படத்தில்தான் ஜி,வி,பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் ஜீ.வி.பிரகாஷுடன் ‘பள்ளிப்பருவத்திலே’ நாயகன் நந்தன் ராம், ‘பசங்க’பாண்டி ஆகியோர் நடிக்கின்றனர். ஆர்யாவுடன் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்கிறார். இவர்களுடன் ஜெனிஃபர், மணிமேகலை, ‘பாகுபலி’ வில்லன் பிரபாகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்துக்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.ராமகிருஷ்ணனும், பாக்கியம் சங்கரும் வசனம் எழுதுகின்றனர்.

இதன் படப்பிடிப்பு சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் அடுக்குமாடிக் குடியிருப்பு அரங்கமைப்பில் மே 25 அன்று தொடங்கியது. தொடர்ந்து அதன் படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது.

அடித்தட்டு மக்கள் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்துக்கு ஜெயில் என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.

ஆக இப்போது தினமும் ஜெயிலுக்குப் போகிறார் ஜி.வி.பிரகாஷ்.

Related Posts