மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா தனுஷ்?
சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 அன்று வெளியாகவிருக்கிறது.இதைத் தொடர்ந்து த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இப்படத்தில்,கயாது லோகர் கதாநாயகியாக நடிக்கிறார்.இவர்களுடன் பிரகாஷ்ராஜ்,யோகிபாபு,குமரவேல் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.கே.கதிர் தயாரிப்பு வடிவமைப்பிலும்,ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பிலும்,பா.கிருத்திகா திரைக்கதையிலும் பங்களிப்பு செய்கிறார்கள்.
தனுஷ் நடித்துள்ள ஓம் திரைப்படம் நவம்பர் 20 அன்று வெளியாகவிருக்கிறது.அதைத் தொடர்ந்து தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.தனுஷ் நடிக்கும் 56 ஆவது படமான அப்படத்தின் படப்பிடிப்பு மாரநாடு கருப்பணசாமி கோயிலில் பூஜையுடன் தொடங்கியது.அப்படத்தில்,வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
எல்லோருக்கும் தெரிந்த இந்த விவரங்கள் இங்கெதற்கு?
அடுத்து,சூர்யா,தனுஷ் ஆகிய இருவரும் சேர்ந்து ஒருபடத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்கிற தகவல் உலவுகிறது.த.செ.ஞானவேல் படத்தை முடித்துவிட்டு சூர்யாவும்,தமிழரசன் பச்சமுத்து படத்தை முடித்துவிட்டு தனுஷும்,இந்தப் புதியபடத்துக்கு வருவார்கள் என்று சொல்லப்படுகிறது.
இவ்விருவரையும் இணைத்துப் படமெடுக்கத் துணிந்தவர் மணிரத்னம்.
இப்போது,விஜய்சேதுபதி சாய்பல்லவி உள்ளிட்டோர் நடிக்கும் இஞ்சிவெல்லம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் மணிரத்னம்.
தமிழ்,தெலுங்கு,இந்தி என எல்லா மொழிகளிலும் தயாராகிக் கொண்டிருக்கும் இந்தப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் இதற்கடுத்த படம் குறித்த வேலைகளிலும் மணிரத்னம் ஈடுபட்டிருக்கிறார் என்றும் அது இரண்டு நாயகர்கள் கொண்ட கதை என்றும் சொல்லப்பட்டது.
அந்தக் கதையில் சூர்யாவையும் தனுசையும் சேர்ந்து நடிக்க வைக்கத் திட்டமிட்டிருக்கிறார் மணிரத்னம்.இது தொடர்பாக இருவரிடமும் பேசியிருக்கிறார்கள்.இருவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதைத் தொடர்ந்து அடுத்தகட்டப் பேச்சுகள் நடக்கின்றனவாம்.சம்பளம் மற்றும் படப்பிடிப்பு நாட்கள் ஆகியன உட்பட எல்லாம் சரியாக அமைந்தால் இந்தக்கூட்டணி உறுதி செய்யப்படும் என்கிறார்கள்.
சூர்யா ஏற்கெனவே மணிரத்னம் இயக்கத்தில் நடித்திருக்கிறார்.தனுஷைப் பொறுத்தவரை,மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க முன்பொருமுறை பேச்சுவார்த்தை நடந்து அது முழுமை பெறவில்லை.இப்போது அது நடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும்,சூர்யா தனுஷ் ஆகிய இருவரும் சிறந்த நடிகர்கள்.தனித்தனியாகவே பெரிய வியாபாரம் உள்ள நடிகர்கள்.இவர்கள் இருவரும் இணைந்து ஒருபடத்தில் நடிக்கிறார்கள் என்பதும் அப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார் என்பதும் திரைப்பட இரசிகர்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தி என்பதில் மாற்றமில்லை.











