பனிவிழும் இரவு – திரைப்பட விமர்சனம்
திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக புகைப்படங்கள் எடுப்பதற்காக கொடைக்கானல் செல்கிறார்கள் ஓர் இணையர்.போன இடத்தில் மணப்பெண் காணாமல் போகிறார்.அவரைக் கண்டுபிடிக்க காவல்துறையை நாடுகிறார் நாயகன்.அவர்கள் தங்கியிருந்த வீட்டில் பேய் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.அந்தப்பெண் என்னவானார்? என்கிற கேள்விக்கான விடையாக விரிந்திருக்கிறது பனிவிழும் இரவு.
நாயகனாக நடித்திருக்கும் அருண் கார்த்தி,இன்றைய இளைஞர்களின் பிரதிநிதி போல் இருக்கிறார்.காதல்காட்சிகளில் இயல்பாக இருக்கிறார்.நாயகி காணாமல் போனதற்குப் பின்பான காட்சிகளில் வேறொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
எனாக்ஷி கங்குலி நாயகியாக நடித்திருக்கிறார்.நிறைவாக இருக்கிறார்.இனிமையான காதலி வேடத்துக்கு சாலப்பொருத்தமாக இருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சேரன்ராஜ்,மருத்துவராக நடித்திருக்கும் கஜராஜ்,காவலராக நடித்திருக்கும் சரவணசக்தி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தத்தம் வேடங்களுக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார் தங்கவேல்,இயற்கை அழகுகளையும் செயற்கை அச்சங்களையும் அழகாகக் காட்சிப்படுத்தி படத்தை இரசிக்க வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சதாமுருகன்,இந்தத் திரைக்கதைக்கு பின்னணி இசை மிகமிக முக்கியம் என்பதை உணர்ந்து இசைத்திருக்கிறார்.அதனால்,காட்சிகளின் தன்மை கூடுதல் வலிமை பெற்றிருக்கின்றன.
படத்தைத் தொகுத்திருக்கும் சி.ஆர்.புவனேஷ்வர்,எம்.எஸ்.செல்வா ஆகிய இருவரும் படம் எங்கும் தொய்வடைந்து விடக்கூடாது என்கிற விழிப்புடன் பணியாற்றியிருப்பதை உணரமுடிகிறது.
செ.ரா.ராஜேஷ் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.கவிதையான பெயரை வைத்துக்கொண்டு அதற்கேற்ற அழகான காதலுடன் படத்தைத் தொடங்கியிருக்கிறார்.நாயகி காணாமல் போன பிறகு முற்றிலும் வேறொரு பாதையில் பயணிக்கிறது படம்.இதுபோன்ற பல்வேறு ஐயங்கள் ஏற்படுத்தக் கூடிய திரைக்கதைகளில் பெரும்பாலும் முன்கூட்டி யூகிக்கும் வகையில் நிகழ்வுகள் அமைந்திருக்கும்.அப்படி இல்லாமல் இரகசியம் பேணிக்காக்கும் திரைக்கதை மற்றும் காட்சிகள் இப்படத்தின் பலம்.
– குமரன்











