விமர்சனம்

ஆல் பாஸ் – திரைப்பட விமர்சனம்

அன்றாட வாழ்க்கைக்கே போராடும் நடுத்தட்டு குடும்பத்தினருக்கு திடீரென பெரும்பணம் கிடைத்தால் என்னவாகும்? என்கிற சுவையான கதையை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கும் படம் ஆல்பாஸ்.

ஜெயப்பிரகாஷ்,சுப்பிரமணிய சிவா,பிரசன்னா பாலச்சந்திரன் ஆகிய மூவரின் குடும்பமும் ஒற்றுமையாக வாழ்கின்றன.இவர்களில் ஜெயப்பிரகாஷ் சொல்வதை மற்ற இருவர் மட்டுமின்றி அவர்கள் குடும்பத்தினரும் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.திடீரென அக்குடும்பத்துச் சிறுவர்கள்,ஐந்து கோடி பணத்தைக் கொண்டுவருகிறார்கள்.அந்தப்பணத்தை எடுத்த இடத்திலேயே வைக்கச் சொல்கிறார் ஜெயப்பிரகாஷ்.அதை ஏற்க மறுக்கிறார்கள்.இதனால் இங்கு குழப்பம்.மறுபுறம் பணத்தைத் தொலைத்த சட்டமன்ற உறுப்பினர் அதைத்தேடுகிறார்.பணம் கிடைத்ததா? எடுத்தவர்கள் நிலை என்ன? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் திரைக்கதை.

ஜெயப்பிரகாஷ்,சுப்பிரமணிய சிவா,பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் சிறந்திருக்கிறார்கள்.அவர்களது மனைவிகளாக நடித்திருக்கும் செந்திகுமாரி,வினோதினி,மோகனா.ஆர் ஆகியோர்,நடுத்தட்டு மனைவிகளை அப்படியே பிரதிபலித்து இரசிக்க வைத்திருக்கிறார்கள்.

படத்தில் இளம் இணையரும் இருக்கிறார்கள்.அவர்கள் காதலிக்கிறார்கள்.இணையர்களாக துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் ஜனனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இவர்களுடைய காதல்காட்சிகள் படத்தை இலகுவாக்குகின்றன.

மூன்று குடும்பத்தையும் சார்ந்த பிள்ளைகளாக நடித்திருக்கும் சிறுவர்கள் சஞ்சய்,கோகுல்,நிகில் ஆகியோரும் ஏற்றிருக்கும் பாத்திரத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

சட்டமன்ற உறுப்பினராக நடித்திருக்கும் சரத் லோகித்ஷவா,மாமன்ற உறுப்பினராக நடித்திருக்கும் சத்யா,காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் அருவி மதன் ஆகியோரால் அந்தக் கதாபாத்திரங்கள் பலம் பெற்றிருக்கின்றன.

ஒளிப்பதிவாளர் தில்ராஜு,வடசென்னையை இதுவரை பார்த்ததிலிருந்து மாறுபட்ட வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்று முனைப்பு காட்டியிருக்கிறார்.காதல் காட்சிகள் மற்றும் பாடல்கள் அவருடைய தனித்தன்மையைக் காட்டப் பயன்பட்டிருக்கின்றன.

ஜேம்ஸ்வசந்தன் இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் இரசிக்கும் விதமாக அமைந்திருக்கின்றன.பின்னணி இசை மூலம் திரைக்கதையோட்டத்தை வேகமாக்க முயன்றிருக்கிறார்.

படத்தைத் தொகுத்திருக்கும் எஸ்.பாஸ்கர்,சில இடங்களில் படத்தைத் தொய்வடைய வைத்திருக்கிறார்.அதைச் சரி செய்திருந்தால் பெரும்பலமாக இருந்திருக்கும்.

எழுதி இயக்கியிருக்கிறார் மைதீன்.ஒரு பக்கம் குவிந்து கிடக்கும் பணம்,இன்னொரு பக்கம் பணத்தேவையோடு குவிந்து கிடக்கும் மக்கள் ஆகிய இருதரப்பையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

பணத்தை வைத்திருப்பவர்கள் மனநிலை,பணமில்லாதவர்களின் குண நிலை,அதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியன குறித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர்.அவருடைய எண்ணத்துக்கு உயிர்கொடுக்கும் வகையில் சரியான நடிகர்கள் அமைந்திருக்கிறார்கள்.

பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைப்பவர்கள் மிகுந்திருக்கும் நேரத்தில் அப்படி இல்லை என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்ல விழைந்திருக்கிறார் இயக்குநர்.

– இளையோன்

Related Posts