September 12, 2026
சினிமா செய்திகள்

ஜெயிலர் 2 தணிக்கைச்சான்று குழப்பம் – விவரம்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர் 2.இப்படத்தில்,
ரஜினிகாந்த், எஸ்.ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் மிர்னா உட்பட பலர் நடிக்கிறார்கள்.
அனிருத் இசையமைக்கிறார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படம்,அக்டோபர் 15,2026 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்,இப்படத்துக்குத் தணிக்கைச்சான்று வாங்கும் வேலைகளில் படக்குழு இறங்கியிருக்கிறதாம்.

இந்தப்படத்துக்கு,வயது வந்தோருக்கான படம் என்கிற அடிப்படையில் ஏ சான்றிதழ் மட்டுமே கிடைக்கும் என்கிற நிலை இருக்கிறதாம்.

இயக்குநர் உள்ளிட்ட படக்குழு மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் ஏ சான்றிதழ் என்பதால் சிக்கல் இல்லை படத்தை அப்படியே வெளியிடுவோம் என்று நினைக்கிறார்களாம்.

ஆனால்,நாயகனாக நடித்திருக்கும் ரஜினிக்கு,ஏ சான்றிதழோடு படம் வெளியாவதில் தயக்கம் இருக்கிறதாம்.அதனால்,படத்தில் என்ன மாற்றம் செய்யவேண்டுமோ அதைச் செய்து யுஏ சான்றிதழ் கிடைக்குமாறு செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

படக்குழுவும் பல்வேறு திருத்தங்களைச் செய்து பார்த்திருக்கிறது.ஆனாலும் ஏ சான்றுக்கான உள்ளடக்கமே இருக்கிறதென்கிற கருத்து வந்திருக்கிறது.

அதனால்,நடிகர் ரஜினியிடம்,உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி ஏ சான்றிதழை மாற்றமுடியுமா? எனப்பாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

பொதுவாக இதுபோன்ற விசயங்களில் தலையிட விரும்பாதவர் ரஜினி.அதேசமயம் படக்குழுவால் முடியவில்லை ஏ சான்றோடு வெளியிடலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்பதால் வேறுவழியின்றி அதற்கு ஒப்புக்கொண்டாராம்.

தனது மேலிட நண்பர்களிடம்,இந்தப்படத்துக்கு யுஏ சான்று கிடைக்க வழிசெய்யுங்கள் என்று கேட்டதாகச் சொல்லப்படுகிறது.

ரஜினியே கேட்டுக்கொண்டார் என்பதால்,அதிகாரப்பூர்வமற்ற முறையில் தணிக்கைக்குழு அனுபவம் உள்ள சிலர் படம் பார்த்திருக்கிறார்கள்.அவர்களும்,படத்தில் இடம்பெற்றிருக்கிற காட்சிகள் மட்டுமின்றி கதையிலேயே கடும் வன்முறை இருக்கிறது.எனவே,இதற்கு ஏ சான்றிதழைத் தவிர வேறெதுவும் தர இயலாது.அப்படி வலுக்கட்டாயமாக வேறு சான்றிதழ் தந்தால் பொதுவெளியில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால்,ஏ சான்றிதழ் இல்லாமல் படத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று ரஜினி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.எனவே,என்ன செய்து அதைச் செய்யலாம் என்கிற முயற்சியில் அனைவரும் இறங்கியிருக்கிறார்களாம்.

ரஜினியின் விருப்பப்படி சான்றிதழ் மாறுமா? அல்லது ஏ சான்றுதான் உறுதியாகுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக அந்த வட்டாரங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது.

இதற்கான உறுதியான விடை இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.

Related Posts