விமர்சனம்

பியார் பிரேமா கல்யாணம் – திரைப்பட விமர்சனம்

2018 ஆம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இளன்,அதன்பின் கவினை நாயகனாக வைத்து ஸ்டார் படத்தை இயக்கினார்.மூன்றாவது படத்தில் அவரே நாயகனாகிவிட்டார்.அவர் இயக்கி நாயகனாகவும் நடித்துள்ள படம் பியார் பிரேமா கல்யாணம்.

வீட்டோட மாப்பிள்ளை என்கிற நடைமுறை வழக்கத்தில் உள்ளதுதான்.அது அரிதிலும் அரிதாக நிகழக்கூடிய ஒன்று.2001 ஆம் ஆண்டு வீட்டோட மாப்பிள்ளை என்கிற பெயரிலேயே ஒரு படம் வந்திருக்கிறது.

இந்தப்படத்திலும் அப்படி ஒரு கதையை எழுதி இக்காலத்திற்கேற்ப நிகழ்வுகள் மற்றும் காட்சிகள் வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

நாயகன் இளனும் நாயகி சான்வி மேக்னாவும் காதலிக்கிறார்கள்.திருமணமும் நடக்கிறது.அந்நாளில் அம்மாவைப் பிரிந்து வரமுடியாது என சான்வி அழுகிறார்.அதனால் இளன் நாயகி வீட்டுக்கே செல்வது என முடிவெடுக்கிறார்.அங்கு நாயகனுக்கு என்னவெல்லாம் நட்க்கின்றன? என்பதை சிரிக்கவும் சிந்திக்கவுமாகக் கொடுத்திருக்கிறது இந்தப்படம்.

நாயகனாக நடித்திருக்கும் இளன்,தொடக்கக்காட்சிகளில் ஒட்டாமல் தோன்றினாலும் போகப்போக அவர் மறைந்து அந்த கதாபாத்திரம் முன்னே வந்துவிடுகிறது.மாமியாரால் அவர் கஷ்டப்படுத்தப்படும்போது பார்வையாளர்கள் கோபம் கொள்கிறார்கள்.காதல் காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருக்கிறார்.

நாயகி சான்விக்கு நல்ல வேடம்.அதற்குத் தக்க அழகும் இருக்கிறது,நடித்துமிருக்கிறார்.

நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா,கொஞ்சம் வில்லத்தனம் கலந்த வேடத்தை ஏற்று பொருத்தமாக நடித்திருக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர்,யோகி பாபு,செந்தில்,கீதா கைலாசம்,இளங்கோ குமரவேல்,மாறன்,கணேஷ்,”ராஜா ராணி” பாண்டியன்,
ராஜாமணி,மோகன பிரியா,ஆருஷ் ஆகிய அனைவரும் வேடத்துக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் செந்திலை வைத்து கரகாட்டக்காரன் நகைச்சுவையை மறுஆக்கம் செய்திருக்கிறார்கள்.

தினேஷ் கே.பாபு ஒளிப்பதிவில் காதல்காட்சிகள் வண்ணமயமாகவும் மற்ர காட்சிகள் மிக எதார்த்தமாகவும் பதிவாகியிருக்கின்றன.

யுவனின் இசையில் பாடல்கள் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.பின்னணி இசையில் வழக்கம்போல் முத்திரை பதித்திருக்கிறார்.

பிரதீப் இ.ராகவ் படத்தொகுப்பில் கொஞ்சம் மெதுவாக கொஞ்சம் வேகமாக என்று போகிறது.

கதை மற்றும் திரைக்கதை எழுதியிருக்கிறார் நிவேதிதா போகங்கர்.கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை இயக்குநர் இளன் மற்றும் ஹரிஷ்.ஜி.ஒய் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.வெகுமக்கள் மனநிலையைப் பிரதிபலிப்பது முக்கியம் என்கிற நோக்கில் செயல்பட்டிருக்கிறார்கள்.

இயக்குநர் இளன்,காதலித்துக் கல்யாணம் பண்ணுவது காதலின் வெற்றியாக இருக்கலாம் ஆனால் அதன்பின்னான வாழ்க்கை எப்படிப்பட்டது? என்பதை ஆண் பெண் ஆகிய இருபாலார் மனநிலையிலிருந்தும் அணுகியிருக்கிறார்.இதன் காரணமாக குடும்பத்துடன் பார்த்து இரசிக்கிற படமாக அமைந்திருக்கிறது.

– கதிரோன்

குறிப்பு – இப்படம் ஆகஸ்ட் 21 முதல் நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் காணக்கிடைக்கிறது.

Related Posts