ஜி.டி.என் – திரைப்பட விமர்சனம்
கோவை மாவட்டம், கலங்கல் என்னும் சிற்றூரில் 23.03.1893 அன்று பிறந்தவர் ஜி.டி.நாயுடு.துரைசாமி என்பது இவரின் இயற்பெயர். கோபாலசாமி இவரின் தந்தையார்.கோபாலசாமி துரைசாமி என்பதன் சுருக்கமே ஜி.டி.
தொழில்துறைவித்தகர்,புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் அறிவியல் கண்டுபிடிப்பாளர்,திறன்மிகு நிர்வாகி,சித்த மருத்துவர்,உயிரியல் விஞ்ஞானி,வேளாண் ஆராய்ச்சியாளர்,நிழற்படக் கலைஞர்,கட்டடக்கலை நிபுணர்,ஆட்டோமொபைல் துறையின் அண்ணல், பகுத்தறிவுவாதி,கல்வியியல் ஆலோசகர்,பேச்சாளர்,எழுத்தாளர்,சமூக சீர்திருத்தக் கொள்கையாளர்,அரசியல் கருத்தாளர் எனப் பன்முகங்கள் ஜி.டி.நாயுடுவுக்கு உண்டு.
வேளாண்கூலிகளுக்குக் குறைந்த கூலியைக் கொடுத்த நிலக்கிழார்களுக்கு எதிராக இளம்வயதில் போராடியவர்,பின்னாட்களில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குச் சங்கம் கண்டார்.
மாந்தநேயம் கொண்ட இந்தத் தமிழ்நாட்டு அறிவியலாளரின் கண்டுபிடிப்புகள் ஏராளம்.அதனால் இவர் அதிசயமனிதர் என மக்களால் அடையாளப்படுத்தப்பட்டார்.அதிசய ரேடியேட்டர்,வாக்குப்பதிவு இயந்திரம்,ஒளிசமனக் கருவி,ராடர்களில் பயன்படும் மைக்கா கெப்பாசிடர்,கார்பன் ரெசிஸ்டர்,கால்குலேட்டர்,சலவை இயந்திரம்,கிரைண்டர்,காசு போட்டால் பாட்டுப்பாடும் இயந்திரம்,இரும்புச் சட்டங்களில் வெடிப்புகளைக் கண்டுபிடிக்கும் கருவி,பழச்சாறு பிழியும் கருவி,ஒலிப்பதிவு இயந்திரம்,டிக்கெட் தரும் இயந்திரம் என இவரின் கண்டுபிடிப்புகள் எண்ணற்றவை.
ஜெர்மனியின் கிரண்டிக் ரேடியோ நிறுவனம்,ஜி.டி.நாயுடுவின் ரேடியோ தயாரிப்பை,தன்பெயரில் வெளியிட வேண்டியது.புதிய முறையிலான 16 எம்.எம் புரெஜெக்டர்,640 பூட்டுக்களைத் திறக்கவல்ல மாஸ்டர் கீ என ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளை விவரித்துக்கொண்டே செல்லலாம்.இவர் கண்டுபிடித்த டீசல் நாசில்,அயல்நாட்டுத் தயாரிப்பைவிட மேன்மையானது எனப் பாராட்டப்பெற்றது.
இவருடைய வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் படம்தான் ஜிடிஎன்.
ஜி.டி.என்னாக நடித்திருக்கிறார் மாதவன்.அவருடைய இளமைக்காலம்,முதுமைக்காலம் ஆகிய இரண்டு தோற்றங்களிலும் வியக்கத்தக்க மாற்றம் காட்டியிருக்கும் மாதவன்,நடிப்பிலும் அந்தக் கதாபாத்திரத்தின் பெருமைக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.
ஜிடிஎன்னின் நண்பராக நடித்திருக்கும் சத்யராஜும் மாறுபட்ட தோற்றத்திலும் நடிப்பிலும் மிளிர்கிறார்.வருமானவரித்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் ஜெயராம் நல்ல வரவேற்புப் பெறுகிறார்.
துஷாராவிஜயன்,பிரியாமணி,அதிதிபாலன்,வினய்ராய்,கருணாகரன்,டீஜேஅருணாச்சலம்,மோகன்ராமன்,தம்பிராமையா,விஜய்யேசுதாஸ், ஷீலா ராஜ்குமார்,பிரிகிடாசாகா,ஷில்பா ஸ்ரீகுமார் என படத்தில் ஏராளமான நடிகர் நடிகையர் இருக்கிறார்கள்.எல்லோரும் அவரவர் வேலையை இயல்பாகச் செய்திருக்கிறார்கள்.பெரியாராக நடித்திருக்கும் விஜய்யேசுதாஸ் குறைவாக வந்தாலும் நிறைவாக இருக்கிறார்.
இன்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்பு அவர் வாழ்ந்த காலகட்டத்தைத் திரையில் கொண்டுவந்து ஆச்சரியம் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன்.ஜிடிஎன்னின் ஜெர்மன் பயணம் மற்றும் இட்லரிடம் விருது வாங்குவது போன்ற காட்சிகளை கணினிவரைகலை மூலம் உருவாக்கியது படத்துக்குப் பலம்.
கோவிந்த்வசந்தா இசையமைத்திருக்கிறார்.அவரும் இசைமூலம் அந்தக் காலகட்டத்தை நினைவுகூர முயன்றிருக்கிறார்.அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
தயாரிப்பு வடிவமைப்பாளர் சிரில் குருவில்லா மற்றும் உடை வடிவமைப்பாளர் ஜிஷாத் சம்சுதீன் ஆகியோரது பங்கு படத்தின் உண்மைத்தன்மைக்கு வலுச்சேர்த்திருக்கிறது.பழைய வாகனங்கள்,அக்காலத்திய உடைகள்,காட்சிகளின் பின்னணியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகிய எல்லாவற்றிலும் பெரும் கவனம் எடுத்து உழைத்திருக்கிறார்கள்.
படத்தொகுப்பாளர்கள் பிஜித்பாலா மற்றும் கே.சசி குமார் ஆகியோர்,ஒரு பயோபிக்கையும் பரபரப்பான படமாக்கியிருக்கிறார்கள்.
கிருஷ்ணகுமார் ராம்குமார் மற்றும் ஆர்.மாதவன் ஆகியோர் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்.கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியிருக்கிறார்.
இக்கால தலைமுறை மட்டுமின்றி எக்காலத்தவரும் கண்டு வியக்கும்படி ஜிடிஎன் வாழ்க்கையைப் படமாக்கியிருக்கிறார்கள்.தன்னம்பிக்கைப் படம்.
– இளையவன்











