சினிமா செய்திகள்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜீத் – படமும் சர்ச்சையும்

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி அஜீத் நடிப்பில் குட்பேட்அக்லி படம் வெளியானது.அப்படம் வெளியாகி ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டாலும் அஜீத் அடுத்து எந்தப்படத்தில் நடிப்பார்? என்கிற தகவல் வெளியாகவில்லை.

அவர் தொடர்ந்து மகிழுந்துப் பந்தயங்களில் கலந்து கொள்வதால் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக தேதிகள் ஒதுக்க இயலவில்லை என்று சொல்லப்படுகிறது.அதனால் அடுத்தபடம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதேசமயம்,அவர் விளம்பரப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் நடித்துள்ள குளிர்பான விளம்பரம் இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

அதைத்தொடர்ந்து அவர் ஒரு கட்டுமான நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் நடித்திருக்கிறார்.

அந்தக் கட்டுமான நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க அஜீத்துக்கு சுமார் இருபத்தைந்து கோடி சம்பளம் என்று சொல்லப்படுகிறது.அஜீத்துக்கு இவ்வளவு சம்பளம் கொடுப்பதால் அந்த விளம்பரத்தை இயக்கும் இயக்குநருக்கு ஒரு கோடி சம்பளம் என்று முடிவுசெய்து ஓர் இயக்குநரை ஒப்பந்தம் செய்ததாம் கட்டுமான நிறுவனம்.

ஆனால்,அஜீத் தரப்பினர் தலையிட்டு அந்த இயக்குநர் வேண்டாம் ஏ.எல்.விஜய்யை இயக்குநராக ஒப்பந்தம் செய்யுங்கள் என்று வலியுறுத்திச் சொன்னார்களாம்.

கட்டுமான நிறுவனமும் சம்மதித்து ஏ.எல்.விஜய்யை அணுகினால்,அவர் ஆறு கோடி சம்பளம் கேட்டிருக்கிறார்.அதிர்ந்து போன நிறுவனம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு கோடி குறைத்ததாகச் சொல்லப்படுகிறது.

அதேசமயம்,அவரை பரிந்துரைத்தவருக்கு ஒரு கோடி கொடுக்கவேண்டும் என்று நிபந்தனை வைத்து அதைப் பெற்றுக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

விளம்பரப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.

அதை வெளியிட கட்டுமான நிறுவனம் தாமதப்படுத்தி வருகிறது.அதற்குக் காரணம்,அந்த நிறுவனத்துக்கு உள்ளே இருக்கும் சில சிக்கல்கள் என்று சொல்லப்படுகிறது.

இதையறிந்த அஜீத் தரப்பு, அந்நிறுவனத்தைத் தொடர்புகொண்டு,அந்த விளம்பரத்தை உடனே வெளியிடவேண்டும் இல்லையெனில் எப்போதும் வெளியிடக்கூடாது என்று கறாராகச் சொல்லியிருக்கிறது.

இதைச் சற்றும் எதிர்பாராத கட்டுமான நிறுவனத்தினர்,அவர்களுக்கு இருக்கும் சிக்கலை விலாவாரியாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.அதன்பின்,நாங்கள் தாமதம் செய்வது இதனால்தான்,எனவே,கொஞ்சம் பொறுங்கள்,பொருத்தமான நேரம் பார்த்து விளம்பரத்தை வெளியிடுகிறோம் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

அதை,அஜீத் தரப்பு ஒப்புக்கொள்ளவில்லையாம்.

இதனால்,இவ்வளவு செலவிட்டும் நம் சொல்லுக்கு மதிப்பில்லையே என்று வருந்திக் கொண்டே விளம்பரப்படத்தை விரைவில் வெளியிடவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

Related Posts