சினிமா செய்திகள்

ஜனநாயகனுக்கு இரண்டு புதிய சிக்கல்கள் – விவரம்

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் தணிக்கைச் சான்று கொடுக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதுதொடர்பாக தணிக்கை வாரியத்திலிருந்து படக்குழுவுக்கு மின்னஞ்சல் வந்துவிட்டது ஏப்ரல் 24 ஆம் தேதி சான்றிதழ் கிடைத்துவிடும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் கூறப்பட்டதாகத் தகவல் உலவிக்கொண்டிருந்தது.

அதனால், ஜனநாயகன் படத்தை மே 7 அல்லது 14 ஆகிய தேதிகளில் வெளியிட்டுவிடலாம் என்று திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில்,தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்தபடி சான்றிதழ் கிடைக்கவில்லையாம்.மாறாக மீண்டும் ஒருமுறை படம் பார்த்துவிட்டுத்தான் சான்றிதழ் தருவோம் என்று தணிக்கை வாரியம் கூறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதனால்,திடுக்கிட்ட தயாரிப்பு நிறுவனம், மே 7 அல்லது 14 ஆம் தேதியில் படத்தை வெளியிடலாமா? அதற்கான வாய்மொழி உத்தரவாதம் கொடுத்தால் கூடப் போதும், நாங்கள் அதற்கான வேலைகளைப் பார்ப்போம் என்று கேட்டிருக்கின்றனர்.

அதற்கு,அப்படி எந்த உத்தரவாதமும் கொடுக்கவியலாது என்று தணிக்கை வாரியம் சொல்லிவிட்டதென்கிறார்கள்.இதனால் அடுத்து என்ன நடக்கும்? என்று தெரியாமல் தயாரிப்பு நிறுவனம் தவித்துக் கொண்டிருக்கிறது.

இன்னொருபக்கம்,யாரும் எதிர்பாரா வகையில், திரைத்துறையிலிருந்தும் ஜனநாயகனுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்கிறார்கள்.

ஏனெனில், மே 7 ஆம் தேதி ஜனநாயகன் படம் வெளியானால் ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாகும் தனுஷின் கர படத்துக்கான திரையரங்குகளில் பாதிப்பு ஏற்படும்.பெரிய திரையரங்குகளில் ஜனநாயகன் போட்டாகவேண்டும் என்கிற நெருக்கடி வரும்,இரண்டாவது வாரத்தில் முதல்வாரத்தை விட திரையரங்குகளுக்கு அதிகப்பங்கு கிடைக்கும் நேரத்தில் படத்தை மாற்றினால் அந்தப் பலன் இருக்காது என்பதால் மே 7 ஆம் தேதி ஜனநாயகனை வெளியிட வேண்டாம் என்று கோரிக்கை வைக்கப்படுகிறதாம்.

இன்னொரு பக்கம், மே 14 ஆம் தேதி சூர்யாவின் கருப்பு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அந்தத் தேதியில் ஜனநாயகன் வந்தால் திரையரங்குகள் ஒதுக்கீட்டில் சிக்கல் வரும் என்று சொல்கிறார்கள்.கருப்பு ஏற்கெனவே வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்ட படம்,திடீரென ஜனநாயகன் வந்தால் எல்லாம் சிக்கலாகும் என்பது விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் கருத்து.

ஒருபக்கம், தணிக்கைச் சான்று கிடைப்பதில் சிக்கல், இன்னொரு பக்கம் திரைத்துறையிலிருந்தே எதிர்ப்பு என்றிருப்பதால், என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குழம்பிப் போயிருக்கிறதென்று சொல்கிறார்கள்.

Related Posts