விமர்சனம்

கார்மேனி செல்வம் – திரைப்பட விமர்சனம்

மகிழ்ச்சி என்பது பொருட்களை நுகர்வதில் மட்டுமே உள்ளது என்ற எண்ணம்.ஊடக விளம்பரங்கள், சமூக அழுத்தங்கள் மற்றும் பிராண்ட் கலாச்சாரம் ஆகியனவற்றிற்கு ஆட்படுதல்.தங்கள் அடையாளத்தை தாங்கள் வைத்திருக்கும் பொருட்களின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்கிற ஆசை.புதியபொருட்கள் உடனுக்குடன் அறிமுகப்படுத்தப்பட்டு, பழையன தேவையற்றது என்கிற மனநிலை.வசதிக்காக பொருட்களை வாங்கி, கடனில் மூழ்கும் நிலை ஆகியன நுகர்வு கலாச்சாரத்தின் வெளிப்பாடுகள்.
நுகர்வு கலாச்சாரம், தேவையற்ற ஆடம்பரப் பொருட்களை வாங்குவதையும்,கழிவுகளை அதிகரிப்பதையும் ஊக்குவிக்கிறது.

இவற்றை மக்கள் மனதில் பதியும்படி கதை எழுதி அதை திரைக்கதையாக்கியிருக்கும் படம் கார்மேனி செல்வம்.

அளவான குடும்பம்,மகிழுந்து ஓட்டுநர் வேலை,அந்த வருமானத்திற்கேற்ற வாழ்க்கை என்றிருக்கும் நாயகன் சமுத்திரக்கனி,சொந்த வீடு மற்றும் சொந்தமாக மகிழுந்து வாங்கவேண்டும் என்கிற எண்ணத்தை நிறைவேற்றும் முயற்சியில் கடனாளியாகிறார்.அத்தியாவசியத் தேவைக்காகக் கடன் வாங்கத் தொடங்கும் சமுத்திரக்கனி,அதை தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வழியாக மாற்றிக் கொள்கிறார். அதனால் பல சிக்கல்கள். அவை என்னென்ன? அற்றிலிருந்து மீண்டாரா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கிறது படம்.

சமுத்திரக்கனி,ஏற்றுக்கொண்ட வேடத்துக்கு பக்காவாக பொருந்தியிருக்கிறார்.பல படங்களில் நல்ல அறிவுரை சொல்லும் அவர் இந்தப்படத்தில் ஏற்றிருக்கும் வேடத்தில் நன்றாக நடித்து நல்லதை உணரவைக்கிறார்.

சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் லட்சுமிபிரியா,நடுத்தர வர்க்க மனைவிகளின் பிரதிநிதியாக இருக்கிறார்.அவர்கள் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கும் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும் எடுத்துக்காட்டாக நடித்திருக்கிறார்.இவர்களின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் கரண் சக்கரவர்த்தியும் நன்று.

நாயகனின் முதலாளியாக நடித்திருக்கும் கெளதம்மேனன்,அவர் மனைவியாக நடித்திருக்கும் அபிநயா ஆகியோர் தேவையான அளவு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்‌ஷன்,கதை சொல்லும் பாடத்தை காட்சிகளிலும் சரியாக வெளிப்படுத்தி கவர்கிறார்.

மியூசிக்லவுட் ஸ்டுடியோஸ் & டெக்னாலஜி (Musicloud Studio & Technology) இசையில் பாடல்கள் கதைக்கேற்பவும் பின்னணி இசை திரைக்கதைக்கு வலுச்சேர்க்கும் வண்ணமும் அமைந்திருக்கிறது.

ஜெகன்.ஆர்.வி மற்றும் தினேஷ்.எஸ் ஆகியோர் படத்தைத் தொகுத்திருக்கிறார்கள்.அவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கவேண்டும்.

சங்கரின் கலைஇயக்கம் அளவு.

எழுதி இயக்கியிருக்கிறார் ராம் சக்ரி.கடன் நெருக்கடியில் சிக்கியிருக்கும் மக்களுக்கு அதன் ஆபத்துகளைப் புரியவைக்கவும் புதிதாக யாரும் அதில் சிக்காமல் தப்பவும் இந்தப் படம் உதவும் என்பதில் மாற்றமில்லை.

– இளையவன்

Related Posts