மரபணு சோதனையில் தெரிந்த உண்மை- மாதம்பட்டி ரங்கராஜ் சமரசம்
மெகந்தி சர்க்கஸ், பென்குவின் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றவர் மாதம்பட்டி ரங்கராஜ். கோவையைச் சேர்ந்த இவர் புகழ் பெற்ற சமையல் கலைஞரும் கூட.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு,தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகக் குற்றம் சாட்டினார் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா.அதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் இணைத்திருந்தார்.
இதை எதிர்த்து மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக, மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா இடையில் மத்தியஸ்தம் செய்ய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷை மத்தியஸ்தராக நியமித்துள்ளது.
இந்தவழக்கு விசாரணையின்போது, தனது குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என நிரூபிக்க, அவருக்கு மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும் என ஜாய் கிரிசில்டா தரப்பிலும், மரபணு சோதனைக்குத் தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக இருதரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, சென்னை இராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் உள்ள தடயவியல் துறையையும், ஆய்வகத்தையும் தொடர்புகொண்டு, மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக,வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில்,இந்தவழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்தப்பட்டு, அதன் முடிவுகள், மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்,சீல் வைத்த கவரில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக, வழக்கறிஞர் ஆணையர் தெரிவித்தார்.
இதனையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையில் மத்தியஸ்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா ஆகிய இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி, ஜூன் 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே, சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ்தான், ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்குத் தந்தை என மரபணு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த விவரத்தை வெளியில் சொல்லாமல் தங்களுக்குள்ளேயே பேசிக்கொள்ளலாம் என்று மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஜாய் கிரிசில்டா ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதன் உண்மைத்தன்மை வழக்கின் இறுதித்தீர்ப்பில் தெரியவரும் என்கிறார்கள்.











