தாய்க் கிழவி படத்தில் நிறையக் கற்றுக்கொண்டேன் – சிவகார்த்திகேயன் வெளிப்படை
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் பிப்ரவரி 27 அன்று வெளியான ‘தாய்க் கிழவி’ திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப்படத்தின் வெற்றி விழா நிகழ்வு மார்ச் 11 அன்று நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் கலையரசு பேசியதாவது…
படத்தின் ரஷ்ஷஸ் பார்த்தபோதே வெற்றிவிழாக் கொண்டாட்டத்தை எங்கு நடத்தவேண்டும் என்று யோசித்தேன்.படத்தில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த அனைத்து நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.குறிப்பாக படத்தைத் தயாரித்த சிவாவுக்கும் படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்ற ராதிகா மேமுக்கும் நன்றி.படத்தின் ரிலீஸ்க்கு முன்பு 250 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டோம்.ஆனால் படத்திற்கு வந்த வரவேற்பை அடுத்து கிடைத்தட்ட 340 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.பின்பு,ரிலீஸ் ஆனதும் முதல்நாள் கிடைத்த வரவேற்பை அடுத்து இப்போது 480 திரைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.புக் மை ஷோவில் மட்டும் 825K புக்கிங் ஆகியிருக்கிறது.ஒரு மில்லியன் நிச்சயம் தாண்டும் என ஏஜிஎஸ் தெரிவித்துள்ளது. படம் ரூ.50 கோடி வசூலித்துள்ளது. தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி இந்தப்படத்திற்காக இறங்கி வேலைபார்த்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி.படத்தின் மீது நம்பிக்கை வைத்த இரசிகர்களுக்கும் நன்றி என்றார்.
ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார்…
குடும்பம், கடவுள், இயற்கை என இவர்கள் ஆதரவால்தான் இந்தப்படத்தை உங்களுக்குக் கொடுக்க முடிந்தது. எஸ்.கே.சார், நடிகர்கள் மற்றும் என்னுடைய குழுவினர் அனைவருக்கும் நன்றி. நல்லபடத்தைக் கொண்டாடிய உங்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
படத்தொகுப்பாளர் சான் லோகேஷ்….
வியாபார ரீதியாகவும் மக்களுக்குப் பிடித்த படமாகவும் இது மாறியிருக்கிறது.மிகுந்த அர்ப்பணிப்போடும் எனர்ஜியாகவும் நாங்கள் பணியாற்றினோம்.என்னுடைய அணிக்கும் நன்றி.நான் சிறுவயதில் முதன்முறையாக திரையரங்குகளில் பார்த்த படம் ‘கிழக்குச் சீமையிலே’.இப்போது, ‘தாய்க் கிழவி’ படத்தில் ராதிகா மேமுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. நிறைய நல்ல நினைவுகளை இந்தப்படம் கொடுத்திருக்கிறது என்றார்.
கலை இயக்குநர் ராமு தங்கராஜ்….
நான் வேலை பார்த்ததில் இந்தப்படம் புதுஅனுபவமாக இருந்தது.மக்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி என்றார்.
பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ்….
சிவகார்த்திகேயனை யாராவது அன்புடன் அணுகினால் அவர் யாரையும் கைவிட மாட்டார் என்பதை உணர்ந்துள்ளேன். எங்களைப் போன்ற எளிய பிள்ளைகளுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. இயக்குநர் சிவாவுக்கும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவுக்கும் நன்றி. படத்தின் தொழில்நுட்பக்குழுவினருக்கும் அன்பும் நன்றியும் என்றார்.
பாடலாசிரியர் கருமாத்தூர் மணிமாறன்….
’தாய்க் கிழவி’ படத்தின் வெற்றியை தீபாவளி கொண்டாட்டமாக கொண்டாடி வருகிறேன்.இன்னும் பல படங்களை தயாரிப்பாளர் சிவாவும் இயக்குநர் சிவாவும் தர வாழ்த்துகள் என்றார்.
நடிகர் முனீஷ்காந்த்….
ராதிகா மேமின் ‘கிழக்குச் சீமையிலே’ படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தவன் இன்று அவரது படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி.நடிகர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் சிவா வெற்றியடைந்திருக்கிறார்.இந்தப்படத்தில் புதுமுகங்கள் என பலரது வாழ்க்கை அடங்கி இருக்கிறது.அனைவரையும் ஒருங்கிணைத்து படத்தை வெற்றிகரமாகக் கொண்டு வந்த இயக்குநர் சிவாவுக்கும் நன்றி.என் கரியரில் முக்கியமான படம் இது என்றார்.
நடிகர் ஜார்ஜ் மரியான்….
இந்தப்படத்தை வெற்றிப் படமாக்கிய இரசிகர்களுக்கும் ராதிகா மேமுக்கும் அனைத்து நடிகர்களுக்கும் நன்றி என்றார்.
நடிகர் முத்துக்குமார்….
என்னை இந்தக் கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்த இயக்குநர் சிவாவுக்கும் தயாரிப்பாளர் சிவாவுக்கும் நன்றி.என்னை இந்தக் கதாபாத்திரம் வேறு இடத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது.’தாய்க் கிழவி’ படத்தில் அனைத்துக் கனிகளும் பழுத்திருக்கின்றன. அதற்குக் காரணமான இரண்டு சிவாக்களுக்கும் நன்றி என்றார்.
நடிகை ரேச்சல்….
தியேட்டரில் நிறையப் பெண்கள் இந்தப்படத்தைப் பார்த்து அழுது,கொண்டாடி இருக்கிறார்கள்.இது அடிக்கடி நடக்காது.அப்படியான படத்தில் நானும் ஒருபங்கு என்பதை நினைத்து மகிழ்கிறேன்.இதற்குக் காரணமான தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் சிவாவுக்கும் நன்றி.‘தாய்க் கிழவி’ படத்தில் என் சுருளி கதாபாத்திரம் எனக்கு மிகப்பெரிய தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுத்திருக்கிறது.எல்லாக் கதாபாத்திரங்களிலும் இது கிடைக்குமா எனத் தெரியாது.படத்தை வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் சிங்கம்புலி….
படத்தை வெற்றிப்படமாக்கிய தம்பி சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் தம்பி சிவகுமாருக்கும் படக்குழுவினருக்கும் இரசிகர்களுக்கும் நன்றி.‘மாயாண்டி குடும்பத்தார்’,‘மகாராஜா’ படங்களுக்குப் பிறகு ’தாய்க் கிழவி’ படத்தில் இந்தக் கதாபாத்திரத்திற்குதான் எனக்கு அதிக போன்கால் வந்தது.படம் வெளியாவதற்கு முன்பு கமல் சாரை பார்க்கவேண்டும் என்ற ஆசையை மேடையில் வெளிப்படுத்தியிருந்தேன்.இரண்டுநாட்களில் கமல்சார் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.அவ்வளவு பிஸி ஷெட்யூலிலும் எனக்கு நேரம் ஒதுக்கி கமல்சார் என்னிடம் பேசினார்.நன்றி என்றார்.
நடிகர் அருள்தாஸ்….
’தாய்க் கிழவி’ படம் ஆரம்பித்ததில் இருந்து இதுநாள் வரை உழைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.இளைஞர்கள் இந்தப்படம் பார்த்துவிட்டு வீட்டில் இருக்கும் தங்கள் பாட்டியையும் கூட்டி வந்தார்கள்.அப்படியான டிரெண்ட் செட்டர் படம் இந்த ‘தாய்க் கிழவி’. எளியமக்களின் குரலாக எனக்கு இந்தப்படத்தில் அமைந்த கதாபாத்திரம் பலருக்கும் பிடித்திருந்தது.இந்தியில் ஒரு வயதுக்குப் பிறகு அமிதாப் எப்படி வேறு ஒரு கோணத்தில் பயணித்தாரோ அதுபோலதான் ராதிகா மேம் நீங்களும்.உங்களை லேடி அமிதாப் எனலாம் என்றார்.
நடிகர் பால சரவணன்….
ரொம்ப வருடங்கள் கழித்து இந்தப்படத்தை பார்த்த பாட்டி ஒருவர் அந்த வயதிற்கு மேல் தைரியமாகவும் வாழ்க்கையைக் கொண்டாடப் போவதாகவும் சொன்னார். அது நெகிழ்ச்சியாக இருந்தது. செல்வம் கதாபாத்திரம் மூலம் என்னையும் உணர்வுப்பூர்வமாக நடிக்க வைத்த இயக்குநர் சிவாவுக்கு நன்றி. எனக்கு சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி என்றார்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா….
எல்லோருடைய முகத்திலும் சந்தோசமும் நிம்மதியும் பார்க்கமுடிகிறது.அதற்குக் காரணம் ‘தாய்க் கிழவி’ வெற்றிதான்.பேஷன் ஸ்டுடியோஸ்,தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்,இயக்குநர் சிவகுமார்.என்னுடைய டீம் மற்றும் அனைவருக்கும் நன்றி என்றார்.
இயக்குநர் சிவகுமார் முருகேசன்….
இந்தப்படத்தை நம்பி வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன் சார்,சுதன் சார் அனைவருக்கும் நன்றி.தயாரிப்பாளர் அணிக்கும் கிரியேடிவ் அணிக்கும் கோல்ட்வார் என்பது நிச்சயம் இருக்கும்.ஆனால், இந்தப்படத்தில் எங்களுக்கு அதுபோன்ற எந்தவொரு பிரச்சினையும் வரவில்லை.அதற்குக் காரணம் எங்களைப் போலவே தயாரிப்பாளர் ஆர்வத்துடன் இந்தப்படத்தை எதிர்பார்த்து உழைத்தார்கள். என்னுடைய குடும்பத்திற்கும்,நண்பர்களுக்கும் நன்றி.என்னுடைய தயாரிப்பாளர்,ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு நன்றி.என்னுடன் சேர்ந்து ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸை அவ்வளவு ஆர்வமுடன் கவனித்தார்.நான் ‘விருமாண்டி’ படம் பார்த்துதான் சினிமாவுக்கு வந்தேன்.எங்கோ இருந்து கமல்சாரை பார்த்துக் கொண்டிருந்த எங்களை இப்போது அவருடனேயே பணிபுரிய வைத்த சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி என்றார்.
நடிகை ராதிகா பேசியதாவது….
உண்மையான வெற்றியைக் கொண்டாட பெருமையாக இந்தமேடையில் நிற்கிறேன்.சினிமாவின் நெளிவு சுழிவுகளைப் பார்த்து நிறைய விசயங்கள் கற்றுக்கொண்டேன்.ஆனால்,எந்த விசயத்தையும் சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.இந்தப்படத்தின் டிக்கெட் 150 ரூபாய்க்கு விற்று ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது.ஆனால்,சில பெரிய ஹீரோக்களின் படங்கள் ரூ.1500- ரூ.2000க்கு டிக்கெட் விற்று பெறும் கலெக்ஷனை விட ‘தாய்க் கிழவி’ வசூல் பெரியது என்பேன். தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் அப்டேட்டாக இருக்கிறார்.படம் பார்த்துவிட்டு கமல்ஹாசன் அவர்கள் என்னிடம் சொன்னார்,“ராதிகா இந்தப்படம் நிச்சயம் ஜெயிக்க வேண்டும். ஏனெனில்,ராதிகா நல்லநடிகை,சினிமாவில் ஜெயித்துவிட்டார்.அதுபோல இயக்குநர் சிவகுமார், தொழில்நுட்பக்குழுவினர், புதுமுக நடிகர்கள் என அனைவரும் ஜெயிக்கவேண்டும்.அதற்காக இந்தப்படம் ஜெயிக்க வேண்டும்” என்றார்.அது நடந்துவிட்டது.
ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு இயக்குநர் சினிமாவை மாற்றுவார்.அதுபோல,இப்போது சிவகுமாரின் காலம்.இயக்குநர் பாரதிராஜா சினிமாவில் புரட்சி செய்ததைப் போல,சிவகுமாரும் செய்வார்.ஒவ்வொரு கேரக்டரையும் அழகாகக் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளார். ஒவ்வொரு கதாநாயகிக்கும் அடுத்தபடம் என்ன என்ற ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும்.வயதையும் அழகையும் அடுத்தவர்களுக்கு நாம் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? தேவையில்லை.நம்மை நமக்குத் தெரிந்தால் போதும்.பெண்களுக்கான வெற்றியாக ‘தாய்க் கிழவி’ படத்தைப் பார்க்கிறேன்.கதைதான் இங்கு கிங்.பெண்களின் குரலைக் கேட்கும் ஆண்கள் இருக்கும்வரை இந்த சமுதாயம் என்றும் கெடாது.தமிழ்சினிமாவில் முதன்முறையாக ஹீரோயினுக்கு இலாபத்தில் பங்கு உண்டு என்று தயாரிப்பாளர்கள் சிவாவும் சுதனும் சொன்னார்கள்.அந்தப்பெருமை எனக்கு உண்டு.சினிமாவில் இது நல்ல முன்னுதாரணம்.நடிகைகள் சார்பாக நன்றி சொல்கிறேன். இந்த மகிழ்ச்சி பணத்திற்காக இல்லை,நம்பிக்கைக்காகதான்.படத்தில் மட்டும் கருத்து சொல்லாமல் அதை நிஜத்திலும் செய்திருக்கிறார்கள்.முதல்வர் ஸ்டாலின் அவர்களும் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இந்தப்படத்திற்கு வரிச்சலுகை தரவேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறேன்.இதனால்,இன்னும் நிறைய பெண்கள் இந்தப்படம் பார்ப்பார்கள் என்றார்.
நடிகர் சிவகார்த்திகேயன்….
இந்தப்படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்த அனைத்து இரசிகர்களுக்கும் நன்றி.இந்தப்படத்தின் கதை சிவகுமார் முருகேசன் சொல்லும்போது சிரித்து மகிழ்ந்தேன்.ஆனாலும், தாய்க் கிழவி ஞாயிற்றுக்கிழமை ஆனால் மதுரைக்குப் போய்வருவார்.அதைப்பற்றி எல்லோரும் கேள்வி கேட்பார்கள்.எனக்கும் அதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது.அதற்கான பதில் தெரிந்ததும் படம் நிச்சயம் வெற்றி பெறும்,இந்தப்படத்தை தயாரித்தே ஆகவேண்டும் என முடிவெடுத்தேன்.நான் இரசித்த எமோசனலான விசயங்களை இரசிகர்களும் கைத்தட்டி வரவேற்றது மகிழ்ச்சியாக இருந்தது.எனக்குள் இருந்த இரசிகன் சரியாக இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டேன்.இந்தப்படத்தை என் குழந்தை போலத்தான் பார்த்துக் கொண்டேன்.சினிமாத்துறையில் தனக்கு இருந்த அனுபவம்,வலி இவை எல்லாவற்றையும் சேர்த்துத்தான் இந்தக் கதாபாத்திரத்திற்கு ராதிகா மேம் உயிர் கொடுத்திருக்கிறார்.இந்தப்படத்தில் ஹீரோ இல்லை என்ற உணர்வே எனக்கு வரவில்லை.படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.என் வாழ்க்கையில் நிறையப் பேரை நியாபகப்படுத்துவதற்காக செய்யப்பட்ட படம்தான் இது.முதலில் என் அம்மா.அப்பா இறந்தபிறகு வீட்டில் காசு சேர்த்துவைத்து என்னையும் அக்காவையும் படிக்கவைத்து கல்யாணம் செய்துவைத்து ஆளாக்கினார்.பிறகு என் அக்கா.’படைக்க,காக்க,அழிக்க என ஆண்களைக் கடவுளாகக் காட்டியவன்,படிப்புக்கும் பணத்துக்கும் பொம்பளையைதான் காட்டி கும்பிடச் சொன்னான்’ என படத்தில் ஒரு வசனம் வரும்.அதை நான் முன்பே உணர்ந்துவிட்டேன் என நினைக்கிறேன்.இதுநாள்வரை என் வரவு,செலவு அனைத்தையும் ஆர்த்திதான் பார்த்துக் கொள்கிறார்.அவர் இல்லை என்றால் புரொடக்ஷன் எல்லாம் நான் செய்திருக்க முடியாது.இவர்கள் எல்லாரும்தான் என் பவுனுத்தாயி.இதுபோல,உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பவுனுத்தாயிகளுக்கும்தான் இந்தப்படம்.
இந்தப்படத்தை மொத்தம் 12 முறை பார்த்திருக்கிறேன்.என் படத்தைக்கூட அத்தனை முறை பார்த்ததில்லை.நிறைய விசயங்கள் இந்தப்படத்தில் கற்றுக்கொண்டேன்.இந்தப்படத்தின் ப்ரீமியர் முடிந்ததும் இயக்குநர் சிவகுமாரின் அப்பா வந்து எங்கள் இரண்டு பேரையும் கட்டிப்பிடித்துக் கொண்டார்.அந்தநொடியில் என் அப்பா இன்னும் இறக்கவில்லை என்பதை உணர்ந்தேன்.இதெல்லாம்தான் எனக்கு நிறைவைக் கொடுக்கிறது.வெற்றி என்பது விளையாட்டில் கூட விளையாட்டாக வராது என்பதை இந்தப்படக்குழு மீண்டும் உணர்த்தியிருக்கிறது.அடுத்து ‘சேயோன்’ படமும் சிவாவுடன்தான்.’தாய்க் கிழவி’ படத்தின் இலாபம் நிச்சயம் தேவைப்படுபவர்களுக்கு உதவும்.எஸ்.கே.புரொடக்ஷன்ஸின் பத்தாவது படத்தை புதுமுக இயக்குநர்தான் இயக்குகிறார்.அவர் பெயர் அம்மாமுத்து சூர்யா. மற்றபடி,படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி
இவ்வாறு அவர் பேசினார்.











