செய்திக் குறிப்புகள்

கஜா புயல் பாதித்த பகுதிகளில் ராகவா லாரன்ஸ் நற்செயல்

கஜ புயல் காரணமாக நாகை புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன.

அம்மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை அதனால் தனிநபர்களும் தொண்டு நிறுவனங்களும் பெரிதும் உதவி வருவதாகவும் ஆனால் அவை போதவில்லை என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் திரைத்தைறையினர் அம்மக்களுக்காக நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்புவது என்று ஆறுதல் கரம் நீட்டினர்.

நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் சார்பில் ஐம்பது இலட்சம் நிவாரண உதவி கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது.

லைகா நிறுவனம் ஒரு கோடி, ரஜினி 50 இலட்சம் ,விஜயசேதுபதி 25 இலட்சம், விக்ரம் 25 இலட்சம், சிவகார்த்திகேயன் 20 இலட்சம் உதவிகள் செய்தனர்.

விஜய் ரசிகர் மன்றங்களுக்குப் பணம் அனுப்பி உதவிகள் செய்யச் சொன்னார்.

கமல் நேரடியாக களத்துக்குப் போனார். சிம்பு தன் ரசிகர்கள் மூலம் உதவி செய்வதாக சொன்னார். விஷால், கார்த்தி ரசிகர்களும் உதவிப்பணியில் ஈடுபட்டிருக்கிறாரகள்.

இயக்குநர் ஷங்கர் உட்பட ஏராளமானோர் தங்களால் இயன்ற உதவிகள் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நிவாரண உதவி செய்கிறார்.

அதுபற்றி அவர் கூறியிருப்பதாவது….

கஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன்.

எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும் அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்

அங்கு இடிந்து முற்றிலும் பாதிக்கப் பட்ட 50 வீடுகளை கட்டித் தர உள்ளேன்.அப்படி பாதிக்கப் பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள் .நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன்.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்

Related Posts