திரைப்படம் விமர்சனம்

செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம் – விமர்சனம்

சீதாராம் பென்ஸி கேஸ் நம்பர் 18, கேஸ் ஆஃப் கொண்டனா ஆகிய படங்களின் தொடர்ச்சியாக வந்திருக்கும் படம் செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்.

காவல்துறை விசாரணையை மையமாகக் கொண்ட படம் என்பது பெயரிலேயே தெரிந்துவிடுகிறது.

நகரத்தையே உலுக்கும் வகையில் இரட்டைக் கொலை நடக்கிறது.மனநலம் பிறழ்ந்தவரால்தான் இப்படிச் செய்யமுடியும் என உடற்கூராய்வு சொல்கிற நேரத்தில் மனநலம் குன்றிய ஒருவர் சிக்குகிறார். அவர்தான் கொலையாளியா? என்பதை படபடப்புடன் சொல்லியிருக்கிறது படம்.

படத்தின் நாயகனாக, காவலதிகாரியாக நடித்திருக்கும் விஜய் ராகவேந்திரா, காவல்துறையினருக்குயுரிய உடல்மொழி மற்றும் நடிப்பை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.நிஜ காவல்துறை அதிகாரிகள் இந்தப்படத்தைப் பார்த்தால் அவரை நிச்சயம் பாராட்டுவார்கள்.

செபாஸ்டியன் எனும் கதாபாத்திரத்தில் முரண்பாடுடைய நடத்தைகளைக் கொண்ட,முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டே, மிகப் பொருத்தமாக நடித்து நல்ல வரவேற்பைப் பெறுகிறார்.

நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் உஷா பண்டாரியின் வேடமும் அதில் அவருடைய நடிப்பும் கவனிக்கத்தக்கதாக அமைந்திருக்கின்றன.

ஒளிப்பதிவாளர் ஹேமந்த், ஒரு விசாரணை அதிகாரியை நாமும் பின்தொடர்ந்து செல்வது போன்ற பிரமையை காட்சிகள் மூலம் ஏற்படுத்தியிருக்கிறார்.

நவநீத் ஷாமின் இசையும் ஒரு கதாபாத்திரம் போலவே படம் நெடுக நிறைந்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது.

ஷ்ஷாங்க் நாராயணா படத்தைத் தொகுத்திருக்கிறார்.திரைக்கதையின் தேவை கருதி நீளநீளமாக எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இரசிகர்களை சோர்வடையச் செய்துவிடக்கூடாது என்கிற எண்ணத்தில் வேலை செய்திருப்பது தெரிகிறது.

பவானி ஷங்கர் அனேகல், கலை இயக்கத்தில் காவல்நிலையம் உட்பட எல்லா இடங்களும் நிஜத்துக்கு மிக நெருக்கமாக இருக்கின்றன.

எழுதி இயக்கியிருக்கும் தேவிபிரசாத் ஷெட்டி, முந்தைய பாகங்களின் தொடர்ச்சி அறுபடாமல் பார்த்துக் கொண்ட அதேநேரத்தில், புதிதாக இந்தப் படத்தைப் பார்க்கிறவர்களும் இரசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டிருக்கிறார்.வசனங்கள், காட்சிகள், அவர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் ஆகிய எல்லாமே அவருக்கு இணக்கமாக அமைந்திருப்பது அவருக்கு பலம்.

தொடக்கம் முதல் கடைசிவரை ஒருவித படபடப்புடனே படத்தைக் கொண்டு சென்றிருப்பது கூடுதல் பலம்.

– சங்கரன்

Related Posts