சினிமா செய்திகள்

சூர்யாவின் கருப்பு விற்பனை ஆனது – விவரம்

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.அண்மையில் வெளியான படத்தின் காட்சிகள் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

2024 ஆம் ஆண்டு நவம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.2025 ஆம் ஆண்டு ஆயுதபூசையையொட்டி அக்டோபர் முதல்தேதி படம் வெளியாகிவிடும் என்று சொல்லப்பட்டது.அதன்பின் அக்டோபர் 20 தீபாவளியையொட்டி வெளியாகும் என்று சொல்லப்பட்டது.

இரண்டுமே நடக்கவில்லை.அதற்குக் காரணம், பட உருவாக்கம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜிக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டதுதான் என்று சொல்லப்பட்டது.

அதன்பின்,எல்லாம் சரி செய்யப்பட்டு படம் முழுமையடைந்துவிட்டது.இப்போது படம் மிக நன்றாக அமைந்துவிட்டது.நிச்சயம் பெரியவெற்றி பெறும் என அபார நம்பிக்கையுடன் சொல்லிக் கொண்டிருக்கிறாராம் ஆர்.ஜே.பாலாஜி.

படம் முழுமையடைந்த பின்பும் வெளியீட்டுத் தேதி குறித்து எந்தத் தகவலும் இல்லை.ஏனெனில் இப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமை விற்பனை நடக்கவில்லை அதனால் வெளியீட்டுத் தேதியை உறுதி செய்யாமல் இருக்கிறார்கள் என்பதுதான் திரையுலக வட்டாரங்களில் உலவிய தகவல்.

இந்நிலையில்,இப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமை விற்பனை முடிந்துவிட்டது என்கிறார்கள்.

இணைய ஒளிபரப்பு உரிமை மற்றும் தொலைக்காட்சி உரிமை ஆகியனவற்றை ஒரு பெரிய நிறுவனம் வாங்க முன்வந்திருக்கிறது.

இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டன என்றும் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது.இதற்கான விலை சுமார் நாற்பத்து மூன்று கோடி என்றும் சொல்கிறார்கள்.தயாரிப்பு நிறுவனம் சுமார் ஐம்பது கோடி விலை சொன்னதாகவும் இப்போது நாற்பத்து மூன்று கொடுக்கிறோம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்கிறோம் என்றும் இணைய நிறுவனம் கூறியிருக்கிறதாம்.ஒப்பந்தத்திலேயே இதைக் குறிப்பிட்டு கையெழுத்திடுகிறோம் என்றும் சொல்லியிருக்கிறார்களாம். அதனால் தயாரிப்பு நிறுவனம் இதற்கு உடன்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

விரைவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்கிறார்கள்.அது நடந்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.அதோடு படத்தின் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுவிடும் என்கிறார்கள்.

Related Posts