February 12, 2025
சினிமா செய்திகள்

கேம்சேஞ்சர் படத்தில் விஜய் கட்சி பற்றிய விசயங்கள் – புதிய தகவல்

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைப்பாளராகவும், திரு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

2025 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 10 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ராக்போர்ட் நிறுவனம் பெற்றுள்ளது.அந்நிறுவனம் எம்ஜி என்ப்படும் குறைந்தபட்ச பாதுகாப்பு அடிப்படையில் படத்தை வாங்கியிருக்கிறது.

அவர்கள் வாங்கியவுடனே தமிழ்நாட்டின் விநியோகப்பகுதிகளில் உள்ள முன்னணி விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு இப்படத்தை வெளியிட முன்வந்திருக்கின்றனர்.ஆனாலும் படத்தின் மீதுள்ள பெரும் நம்பிக்கையில் விநியோக அடிப்படையில் தமிழ்நாடெங்கும் வியாபாரம் செய்திருக்கிறார்கள்.

இப்படத்தின் முன்னோட்டம் வெளியான பின்பு இப்படத்தில் அரசியல் தொடர்பான கதை இருக்கிறது என்பது புலனாகிறது.

அது தொடர்பாக விசாரித்தால் சில வியப்பான விசயங்கள் சொல்கிறார்கள்.

இப்படம் தொடங்கி சுமார் நான்காண்டுகளுக்கு மேல் ஆகிறது.அப்போதே கதை திரைக்கதை வசனங்கள் ஆகியனவற்றை எழுதியிருக்கிறார்கள்.

அவை அனைத்தும் தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளை ஒத்திருக்கிறதாம்.

பொதுவாகவே,ஷங்கர் படங்களில் இப்படி நடந்தால் எப்படி இருக்கும்? என்கிற கற்பனைதான் அடிப்படையாக இருக்கும்.அந்த வகையில் அவர் நான்காண்டுக்ளுக்கு முன்பு செய்த கற்பனை இப்போது நிஜத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதால் அந்த மாநிலங்களில் இப்படம் பெரிய வெற்றியை ஈட்டும் என்கிறார்கள்.

ஆந்திரா அரசியல் தமிழ்நாட்டுக்கு ஒத்துவராதே? இங்கே எப்படி இருக்கும் என்றால்?

திரைக்கதையில் இருக்கும் விசயங்களை அப்படியே வைத்துக் கொண்டு வசனங்களில் தமிழ்நாட்டு அரசியலுக்கேற்ப மாற்றங்கள் செய்திருக்கிறாராம்.அவை இங்கேயும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று சொல்கிறார்கள்.

அதோடு,இன்னொரு முக்கியமான விசயமும் இருக்கிறதாம்.

அண்மையில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருக்கிறார்.அவருடைய வருகையால் தமிழ்நாட்டு அரசியலில் மாற்றங்கள் நடக்கும் என்று சொல்லப்படுகிறதல்லவா? அது தொடர்பான காட்சி மற்றும் வசனங்கள் இப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றனவாம்.

அவற்றை வெளிப்படையாக வைக்காமல் நுட்பமாகப் பார்த்துணரும்படி வைத்திருக்கிறார்களாம்.ஆனாலும் இரசிகர்கள் புத்திசாலிகள் என்பதால் படம் வெளியானவுடன் அவை அனைத்தும் தெரிந்துவிடும்.அவை இப்படத்துக்குத் தமிழ்நாட்டிலும் பெரிய வெற்றியைத் தேடிக் கொடுக்கும் என்று சொல்கிறார்கள்.

இன்னும் சிலநாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts