தணிக்கைக் குழுவில் சிக்கல் – ஜனநாயகன் படக்குழு பதற்றம்
எச்.வினோத் இயக்கத்தில் விஜய்,பூஜா ஹெக்டே,மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜனநாயகன்.இப்படம் 2026 பொங்கல் நாளையொட்டி சனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப்படம் சுமார் 2.45 மணிநேரம் இருக்கும்படி தொகுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.அதோடு விஜய்யின் முந்தைய படங்களின் தொகுப்பு சுமார் 20 நிமிடங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறதாம்.
இந்நிலையில், இப்படத்திற்குத் தணிக்கைச் சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இப்படம் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி என்கிற படத்தின் மறு உருவாக்கம் என்று சொல்லப்படுகிறது.தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடித்துள்ள அந்தப்படம் மிகுந்த வன்முறைக் காட்சிகளைக் கொண்டிருந்தது.அதை அப்படியே பிரதியெடுத்திருப்பதால் இப்படத்திலும் அதீத வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றனவாம்.
இதனால் இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் சுமார் 64 இடங்களில் வெட்டு கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.இவற்றில் பல இடங்களில் வசனங்களை அமைதிப்படுத்துவது பல இடங்களில் வன்முறைக் காட்சிகளை நீக்குவது, சில இடங்களில் சில நிமிடக் காட்சிகளை நீக்குவது அல்லது மாற்றியமைப்பது எனப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்கிறார்கள்.
பகவந்த் கேசரி படம், 71 ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தெலுங்குத் திரைப்படத்திற்கான விருதையும் ,மூன்றாவது சிறந்த திரைப்படத்திற்கான தெலுங்கானா மாநில கடார் விருதையும் பெற்ற படம்.இந்தப் படத்தை மொழிமாற்றும்போது விஜய்க்காகவும் தமிழுக்காகவும் பல மாற்றங்களைச் செய்ததாகச் சொல்லப்பட்டது.அந்த மாற்றங்கள் மற்றும் பாலகிருஷ்ணா செய்தவற்றை அப்படியே படமாக்கியதும்தாம் அனர்த்தத்தை ஏற்படுத்திவிட்டன என்கிறார்கள்.
ஏனெனில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா செய்யும் சண்டைக்காட்சிகள் மற்றும் பேசும் வசனங்கள் எல்லாம் பெரும்பாலும் ஜாலியாக எடுத்துக் கொள்ளப்படும்.நடிகர் ரஜினிகாந்த் ஒருமுறை, பாலையா ஓடுகிற ரயிலை ஒற்றைக் கையால் நிறுத்தினால் கூட மக்கள் ஏற்றுக்கொள்வார்கள், அதையே நான் செய்தால் நம்பமாட்டார்கள் என்று பேசியிருந்தார்.அதனால் பாலகிருஷ்ணா செய்ததைத்தானே நாம் செய்கிறோம் என்று ஜனநாயகன் படக்குழு படமாக்கியதாம்.
அவையும் சிக்கலுக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று சொல்கிறார்கள்.இதனால் ஜனநாயகன் படக்குழு பெரும் பதற்றம் அடைந்திருக்கிறதாம்.
இப்போது,படத்தின் மையக்கரு பாதிக்கப்படாத வகையில் தணிக்கைக்குழு சொன்ன அந்த மாற்றங்களைச் செய்து படத்துக்குச் சான்று பெறுகிற வேலைகளில் படக்குழு மும்முரமாக இறங்கியுள்ளது என்கிறார்கள்.எப்படியிருந்தாலும் யு ஏ சான்றிதழ் தான் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.










