தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு இராதாகிருஷ்ணன் போட்டி – விவரம்
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும்.
கடந்த முறை, 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது.
அதில்,அப்போது தலைவராக இருந்த தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி மீண்டும் களமிறங்கியது.
அந்த அணியில் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளியும் துணைத்தலைவர்களாக லைகா தமிழ்க்குமரன் மற்றும் ஏஜிஎஸ் அர்ச்சனாகல்பாத்தி ஆகியோர், செயலாளர்களாக இராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசன் ஆகியோர். பொருளாளராக சந்திரபிரகாஷ்ஜெயின் போட்டியிட்டனர். புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இணைச்செயலாளர் பதவிக்கு சவுந்தர் போட்டியிட்டார்.
இன்னொரு பக்கம்,அப்போது செயலாளராக இருந்த மன்னன் தலைமையில் ஓர் அணி உருவானது.
அந்த அணியில் தலைவர் பதவிக்கு மன்னனும் செயலாளர்களாக கமீலாநாசர் மற்றும் தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். துணைத்தலைவர்களாக மைக்கேல்ராயப்பன், விடியல்ராஜு ஆகியோர் போட்டியிட்டனர்.
அந்த அணியில பொருளாளராக லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் போட்டியிட்டார்.இணைச்செயலாளர் பதவிக்கு சி.மணிகண்டன் போட்டியிட்டார்.
அந்தத் தேர்தலில் தேனாண்டாள் முரளி அணி வெற்றி பெற்றது.
இப்போது அதன் பதவிக்காலம் 2026 மார்ச் உடன் நிறைவடையவிருக்கிறது.
அடுத்த தேர்தல் இவ்வாண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடக்கவிருக்கிறது.
விரைவில் நடைபெறவிருக்கும் பொதுக்குழுவில் தேர்தல் தேதி இறுதி செய்யப்படும் என்று சொல்கிறார்கள்.
இந்நிலையில் இப்போதே தேர்தலில் போட்டியிட பலர் தயாராகி வேலைகளை தொடங்கிவிட்டார்கள்.
தேனாண்டாள் முரளி, இம்முறை போட்டியிடவில்லையாம். அவருக்குப் பதிலாக அந்த அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று செயலாளராக இருக்கும் இராதாகிருஷ்ணன், இப்போது தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிடவிருக்கிறாராம்.
அந்த அணியில் பொருளாளராக இருக்கும் சந்திரபிரகாஷ் ஜெயின் இம்முறை போட்டியிடவில்லை என்று ஒதுங்கிக் கொண்டாராம்.
அதனால் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இராதாகிருஷ்ணன், தம்முடைய அணிக்காக போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார்.
இன்னொருபுறம், இயக்குநர் லிங்குசாமியின் சகோதரர் போஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறாராம். அவரும் தனக்கான அணி திரட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
பொதுக்குழுவுக்கு முன்பாக அணிகள் உருப்பெற்றுவிடும் என்று சொல்லப்படுகிறது.
இதனால் இப்போதே தயாரிப்பாளர்கள் சங்க வளாகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.











