காப்பான் படத்துக்கும் வந்தது சிக்கல் – தடை கோரி வழக்கு
நடிகர் சூர்யா நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாக உள்ள அந்தப் படத்தின் கதை திருடப்பட்டதாக சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சரவெடி’ என்ற தலைப்பில் கதை எழுதி அதை இயக்குநர் கே.வி.ஆனந்திடம் தெரிவித்ததாகவும் அந்த கதையை ‘காப்பான்’ என்ற பெயரில் கே.வி.ஆனந்த் தற்போது படமாக்கியுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
தன்னுடைய கதைப்படி, நதிநீர் இணைப்பு மற்றும் விவசாயம் குறித்தும் பிரதமரிடம் கேள்வி கேட்கும் பத்திரிகையாளராக கதாநாயகன் கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டிருந்ததாகவும் தற்போது அந்த கதாப்பாத்திரத்தில் சூர்யா நடித்து வருவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விசாரணையை வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
காப்பான் படத்தில் சூர்யா, தேசியப் பாதுகாப்புப் படையின் அங்கமான சிறப்புப் பாதுகாப்புக் குழுவை சேர்ந்தவராகவும், அவர் பிரதமரின் பாதுகாப்புப் படையில் இருப்பவர் என்றும் சொல்லப்படுகிறது.
இருப்பினும் படம் வெளியாகவிருக்கும் நேரத்தில் இவ்வழக்கு வந்திருப்பதால் படக்குழுவினர் கலக்கமடைந்துள்ளனர்.