சினிமா செய்திகள்

விஷால் சுந்தர்.சி படம் இன்று தொடக்கம் – விவரங்கள்

நடிகர் விஷால் இப்போது மகுடம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரவி அரசு இயக்கத்தில் தொடங்கிய ‘மகுடம்’ படத்தின் இயக்குநர் பொறுப்பையும் விஷாலே ஏற்றிருக்கிறார் என்கிற தகவல் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இருக்கிறது.

இந்நிலையில், அடுத்த படத்தைத் தொடங்குகிறார் விஷால்.

அவருடைய அடுத்த படத்தை சுந்தர்.சி இயக்குகிறார்.12 ஆண்டுகள் தாமதத்துக்குப் பின் இவ்வாண்டு தொடக்கத்தில் வெளியான ‘மதகஜராஜா’ படத்தின் பெரிய வெற்றியைத் தொடர்ந்து, விஷால் – சுந்தர்.சி மீண்டும் இணையும் முடிவு எடுக்கப்பட்டது.

இப்போது, நயன்தாரா நடிக்கும் ’மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் சுந்தர்.சி. அதனை முடித்துவிட்டு விஷால் படத்தைத் தொடங்குவார் என்று சொல்லப்பட்டது.

ஆனால், அதிரடியாக இன்று தொடங்குகிறது விஷால் சுந்தர்.சி கூட்டணியில் உருவாகும் படம்.

இந்தப்படத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நாளில் வெளியிடுவதற்காக ஒரு படப்பிடிப்பை இன்று தொடங்குகிறார்கள்.இன்று புகைப்படப் படப்பிடிப்பு என்று சொல்லப்படுகிறது. ஒரு சண்டைக்காட்சியை படமாக்கி அதை படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நாளில் வெளியிடவிருக்கிறார்களாம்.

இப்படத்தில் விஷாலுக்கு இணையர்களாக தமன்னா மற்றும் கயாடு லோகர் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.அதேபோல் மதகஜராஜா வெற்றிக் கூட்டணி என்பதால் விஜய் ஆண்டனியை இசையமைக்க வைக்கலாம் என்று திட்டமிட்டனர்.அவருடைய தேதிகள் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால் அவர் இல்லையென்றால் ஹிப்ஹாப் ஆதி என்று முடிவு செய்திருக்கிறாராம் சுந்தர்.சி.

இந்தப்படத்தை ஏ.சி.சண்முகம் குழுமமே தயாரிக்கிறது.முதல்பிரதி அடிப்படையில் சுந்தர்.சி தயாரித்துத் தருவார்.

நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் தொடங்கும் என்கிறார்கள். அதற்குள் மகுடம் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி நிறைவடைந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவது என்று முடிவெடுத்துவிட்டார்கள்.

இவ்வாண்டு விஷாலின் பழைய படமான மதகஜராஜா வெளியாகி அவருக்கு வெற்றி கொடுத்தது.அதுவும் இல்லையென்றால் இவ்வாண்டு அவருக்குப் படமே இருந்திருக்காது.

அந்தக் குறையைத் தீர்க்க அடுத்த ஆண்டு அவருடைய இந்த இரண்டு படங்களும் வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.

விஷால் இரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக இந்தச்செய்தி அமைந்திருக்கிறது.

Related Posts