தணல் – திரைப்பட விமர்சனம்
காவல்துறையில் கடைநிலைக் காவலராகச் சேரும் நாயகன் அதர்வா,ரோந்துப் பணியின்போது ஒரு சந்தேக நபரை விசாரிக்க முற்படுகிறார்.அந்த நபர் தப்பித்து ஓடுகிறார்.அவரைத் துரத்திச் செல்லும் அதர்வா உள்ளிட்ட காவலர்கள் ஒரு பெரிய சிக்கலில் சிக்குகிறார்கள்.அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? அந்தச் சிக்கல் என்ன? அதன் முடிவென்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைதாம் தணல்.
காவல்துறை வேடம் அதர்வாவுக்குப் புதிதில்லை.ஏற்கெனவேவும் அதில் பெயர் பெற்ற அவர் இந்தப்படத்திலும் அப்படியே இருக்கிறார்.ஒரு நாயகன் தன்னைக் காட்டிலும் தன்னை நம்பியிருப்பவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது முக்கியம் என்பதை உணர்ந்து நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் லாவண்யா திரிபாதி,கதையை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்தும் முக்கியமான வேடம் அவருக்கு.அதை நன்றாகச் செய்திருப்பதோடு வழக்கமாக நாயகிகளுக்குரிய வேலைகளையும் சரியாகச் செய்திருக்கிறார்.
ஷாரா,செல்வா,அழகம் பெருமாள்,போஸ்வெங்கட்,லக்ஷ்மி பிரியா,சந்திரமெளலி,பாரத்,ஷர்வா,தாஃபிக்,பிரதீப் கே.விஜயன் உள்ளிட்ட பலரும் அளவாக நடித்து பலமாக இருக்கிறார்கள்.
முக்கியவேடத்தில் நடித்திருக்கும் அஸ்வின் கக்கமுனு மிகவும் கவனிக்கத்தக்க வேடத்தில் கவனம் ஈர்க்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனின் ஒளிப்பதிவில் திரைக்கதையில் இருக்கும் பரபரப்பு காட்சிகளிலும் பரவியிருக்கிறது.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்டு இரசிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.இந்தத் திரைக்கதைக்கு பின்னணி இசை தான் பெரும் பலமாக இருக்கும் என்பதை உணர்ந்து இசையமைத்திருக்கிறார்.அது படத்தின் நகர்வுக்கு மிக உதவியாக அமைந்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் கலைவண்ணன் உழைப்பில் படம் விறுவிறுவென நகர்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் ரவீந்திர மாதவா.ஒரு மாறுபட்ட கதை அதற்கேற்ற திரைக்கதை அதற்குத் தக்க நடிகர்கள் என எல்லாவற்றையும் சரியாகக் கோர்த்திருக்கிறார்.குறிப்பாக இந்தக் கதையின் நாயகனாக அதர்வா இருக்கிறார் என்பது படத்துக்குப் பொருத்தம்.அந்த எதிர்பார்ப்புக்கேற்ற நடிப்பைக் கொடுத்து படத்தைக் காத்திருக்கிறார் அதர்வா.
– இளையவன்











