மீண்டும் வந்த சிபிச்சக்ரவர்த்தி – சிவகார்த்திகேயனின் அடுத்த பட தகவல்
சிவகார்த்திகேயன் நடிப்பில் இப்போது இரண்டு படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.அவற்றில் ஒன்று, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிக்கும் மதராஸி.இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து இப்போது அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது படம், சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடிக்கும் பராசக்தி.இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்கள் தடைபட்டிருந்தது.இப்போது மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்கள் அப்படத்தின் படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இவ்விரண்டு படங்களுக்கு அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படம் பற்றி எவ்வித அறிவிப்பும் இல்லை.
அதேசமயம், அடுத்து பேசன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை குட்நைட் படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகரன் இயக்குகிறார் என்று ஒரு தகவல் இருக்கிறது.
அடுத்து, வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றொரு தகவலும் இருக்கிறது.
இந்த இரண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் அடுத்து எங்கள் படத்தின் படப்பிடிப்புதான் தொடங்கவிருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
எந்தப்படம் தொடங்கவிருக்கிறது? என்பது இன்னும் சம்பந்தப்பட்டவர்களுக்கே உறுதியாகத் தெரியாத நிலைதான் நீடிக்கிறது என்கிறார்கள்.
இதற்கிடையே இன்னொரு அதிரடி மாற்றமும் நடந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.
அது என்ன மாற்றம்?
பேசன் ஸ்டுடியோஸ் தயாரிக்கவிருக்கும் படத்தை குட்நைட் பட இயக்குநர் இயக்குவதாக இருந்ததல்லவா? அதில்தான் மாற்றம் நடந்திருக்கிறதாம்.
அவர் சொன்ன கதை பிடித்து அதை முழுமையான திரைக்கதையாக்குவதற்காக அலுவலகம் போட்டு வேலை நடந்து கொண்டிருந்த நேரத்தில் அந்த அதிரடி மாற்றம் நடந்திருக்கிறது.
இந்நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க முதலில் ஒப்பந்தமாகியிருந்தவர் டான் படத்தை இயக்கிய சிபிச்சக்ரவர்த்தி.
சிவகார்த்திகேயனுக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத்தான் அதில் மாற்றம் நடந்து விநாயக் சந்திரசேகரன் உள்ளே வந்தார்.
இப்போது மீண்டும் சிபிச்சக்ரவர்த்தியே வந்துவிட்டார் என்றும் அவர்தான் பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
சிவகார்த்திகேயனுக்கும் தயாரிப்பாளருக்கும் பிடிக்காத போதும் ஒரு நிர்ப்பந்தம் காரணமாக இது நடந்துவிட்டதென்று சொல்லப்படுகிறது.அதை சிவகார்த்திகேயனும் ஒப்புக்கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.
அடுத்த படப்பிடிப்பு அதுதான் என்றும் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.
என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.











