தனுஷ் நடிக்கும் அடுத்தபடம் நாளை தொடக்கம் – விவரம்
தனுஷ் இப்போது இட்லிகடை படத்தை இயக்கி நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இப்படம்,இவ்வாண்டு ஆயுதபூசையையொட்டி அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கடுத்து அவர் நடித்துக் கொண்டிருந்த இந்திப்படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துவிட்டார் என்று சொல்லப்பட்டது.
இதனால் இட்லிகடை படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் அடுத்தபடம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தனுஷின் 55 ஆவது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை மதுரை அன்புவின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதோடு அதன் தொடக்கவிழாவும் நடைபெற்றது.
அதனால், அந்தப்படத்தின் படப்பிடிப்புதான் அடுத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அந்த இயக்குநர் இன்னமும் முழுமையான திரைக்கதையை எழுதி முடிக்கவில்லையாம். அவர் முழுமையாகத் தயாரான பிறகு அந்தப்படத்தைத் தொடங்கலாம் என்று எல்லோரும் பேசி முடிவெடுத்துவிட்டார்களாம்.
அந்தப்படம் இல்லையென்றதும், அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தை லலித்குமார் தயாரிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.ஆனால் ஜனநாயகன் படம் வெளியாகும் வரை அவர் அடுத்த படத்தில் கவனம் செலுத்தவியலாது என்பதுதான் எதார்த்தம்.
அதனால் அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது சரியில்லை. உண்மையில் தனுஷின் அடுத்தபடத்தைத் தயாரிக்கவிருப்பது ஐசரிகணேஷின் வேல்ஸ் நிறுவனம் என்பது உறுதியாகியிருக்கிறதாம்.
கடந்த ஆண்டே, வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க தனுஷ் ஒப்புக்கொண்டிருந்தார். அந்தப்படத்தை போர்த்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ்ராஜா இயக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.
இந்தப்படம்தான் தனுஷ் அடுத்து நடிக்கவிருக்கும் படம் என்றும் அதன் தொடக்கவிழா நாளை நடக்கவிருக்கிறதாம்.
நாளை பூசையுடன் தொடக்கவிழாவை நடத்துவதோடு படப்பிடிப்பையும் தொடங்கவிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.இந்தப்படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.
நாளை தொடங்கி,ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை இதன் படப்பிடிப்பு நடக்கும் என்றும் அதன்பின் ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.










