தமிழினப்படுகொலை நாளில் இலங்கையில் படப்பிடிப்பு – மதராஸி பட சர்ச்சை
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிஜு மேனன், வித்யூத் ஜாம்வால், விக்ராந்த், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மதராஸி’. இதன் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையுமுன்பே
செப்டம்பர் 5 ஆம் தேதி ‘மதராஸி’ படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துவிட்டது.
பராசக்தி படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு இப்படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என்று சொல்லப்பட்டது.
அந்தப்படத்தின் படப்பிடிப்பும் கால வரையறையின்றித் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.
இதனால், மதராஸி படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார்கள்.
கடந்த சில நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடந்து வருகிறது.
அதில், சிவகார்த்திகேயன், நாயகி ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இந்தப்படத்துக்காக சிவகார்ததிகேயன் தாடி வளர்க்க வேண்டியிருந்தது என்றும் அதனால் படப்பிடிப்பு தள்ளிப்போய்க் கொண்டிருந்தது என்றும் சொல்லப்பட்டது.
இப்போதும் படத்துக்குத் தேவையான அளவு தாடி வளர்நதுவிட்டதா என்றால்? இல்லையாம்.
பிறகெப்படி?
ஓரளவு வளர்ந்திருக்கும் தாடியோடு தேவையான அளவு ஒட்டுத்தாடி வைத்துக் கொண்டிருக்கிறாராம்.
எதார்த்தம் நிரம்பி வழியும் இக்காலத்தில் ஒட்டுத்தாடி வைத்து நடித்தால் அது கேலிக்கு ஆளாகாதா? என்கிற கேள்வி வரும்.
அதற்கும் பதில் இருக்கிறது.
அமரன் படத்தில் நிறைய நேரம் அடர்ந்த தாடியோடு வருவார் சிவகார்த்திகேயன். அது முழுக்க உண்மையான தாடி இல்லையாம். ஒட்டுத்தாடி ஒட்டிக்கொண்டுதான் நடித்தாராம்.
அது எதுவுமே இரசிகர்களுக்கும் மக்களுக்கும் மட்டுமின்றி திரைத்துறையினருக்கும் கூடத் தெரியவில்லை. அவ்வளவு நேர்த்தியாக ஒப்பனை செய்து கொள்ளும் வசதிகள் இப்போது இருக்கின்றன.
அதே வழிமுறையைப் பின்பற்றி இந்தப்படத்திலும் அவர் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இன்னொரு பக்கம், அடர் தாடியில்லாமல் அவர் நடிக்கிற காட்சிகளும் இருக்கின்றன. அவற்றையும் சேர்த்து படம் பிடித்துவிடலாம் என்று திட்டமிட்டே சென்றிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இன்னொருபுறம், இப்படத்தின் படப்பிடிப்பை இலங்கையில் நடத்துவது பற்றிய விமர்சனங்களும் வருகின்றன.
பராசக்தி படத்தின் கதை 1960 களில் நடப்பதுபோல் இருக்கிறது. அந்தக் காலகட்ட தொடர்வண்டிப்பாதை உள்ளிட்ட சில காரணங்களுக்காக அங்கு போய் படப்பிடிப்பு நடத்தினார்கள்.
இந்தப்படத்துக்கும் அங்கு போக வேண்டிய அவசியமென்ன? அதுவும் தமிழினப்படுகொலை நாளில் அங்கு போய்ப் படப்பிடிப்பு நடத்துவது சரியா? என்கிற விமர்சனங்களும் வந்து பொண்டிருக்கின்றன.











