சினிமா செய்திகள்

ஐந்து மாதங்கள் தள்ளிப்போன இட்லிகடை – ஏன்?

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் படம் இட்லிகடை. இப்படம் அக்டோபர் 1,2025 அன்று வெளியாகுமென நேற்று (ஏப்ரல்4,2025) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இட்லி கடை படத்தில், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கிரண் கெளசிக் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படத்தை தனுஷ் உடன் இணைந்து ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார்.

இப்பட்த்தின் படப்பிடிப்பு, தேனி, பொள்ளாச்சி, சென்னை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.பெரும்பகுதிப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது என்றும் மீதிப்படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் வெளிநாட்டில் சில நாட்கள் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

படப்பிடிப்பு நிறைவடையும் முன்பே 2024 நவம்பர் 8 ஆம் தேதியன்று,இப்படம் ஏப்ரல் 10,2025 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவித்தார்கள்.

ஆனால் இந்தப்படம் ஏப்ரல் 10 அன்று வெளியாகாது என்று செய்திகள் வெளியாகின.அவற்றிற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக 2025 பிப்ரவரி 1 ஆம் தேதியன்று நடிகர் அருண்விஜய்யைப் பாராட்டும் விதமாக தனுஷ் வெளியிட்டிருந்த சமூகவலைதளப் பதிவில் ஏப்ரல் 10 அன்று உலகம் முழுதும் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது.

இரண்டு மாதங்களில் அந்த அறிவிப்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டு முதலில் சொன்ன தேதியிலிருந்து சுமார் ஐந்து மாதங்கள் தள்ளி அக்டோபர் 1 அன்று படம் வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.இந்தத் தேதியில் வெளியாகும் என முதலில் சொல்லப்பட்ட விஜய்யின் ஜனநாயகன் அடுத்த ஆண்டு பொங்கலுக்குப் போய்விட்டது குறிப்பிடத்தக்கது.

இட்லிகடை வெளியீடு ஐந்து மாதங்கள் தள்ளிப்போனது ஏன்?

இப்படத்தின் நாயகி நித்யாமேனனின் தேதிச் சிக்கலால் இவர்களால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த முடியவில்லை என்பது ஒரு காரணம்.இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்றபோது பெரிய அளவில் தீ எரிவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டதாம்.அக்காட்சியின் போது தீக்கங்குகளால் தனுஷுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கிறது.உடனடியாக அது சரியாகிவிடும் என்று நினைத்திருக்கிறார்.அப்படி இல்லாமல் பல நாட்கள் அவர் சிகிச்சை மற்றும் ஓய்வு எடுக்கவேண்டியதாகிவிட்டதாம்.

இதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.இப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என்றாலும் ஜூனில் தக்லைஃப், ஆகஸ்டில் கூலி இதற்கிடையில் தனுஷே நடித்திருக்கும் குபேரா ஆகிய படங்களின் வெளியீடு இருக்கின்றன.

இவற்றின் காரணமாக ஆயுதபூசையையொட்டி அக்டோபர் 1 ஆம் தேதிக்குப் போயிருக்கிறது இட்லிகடை.அக்டோபர் 1 புதன்கிழமை என்பதால் ஐந்து நாட்கள் விடுமுறை இருக்கிறது.இதனால் நல்ல வசூலும் காத்திருக்கிறது.

இதனால் வெளியீடு ஐந்துமாதங்கள் தள்ளிப்போனதும் நல்லதுதான் என்று படக்குழுவினர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

Related Posts