செய்திக் குறிப்புகள்

நான் சென்னையில் பிறந்தவன் பெருமையாக இருக்கிறது – விஷ்ணுமஞ்சு நெகிழ்ச்சி

பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’. இதில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்‌ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

பரச்சூரி கோபால கிருஷ்ணா, ஈஸ்வர் ரெட்டி, ஜி.நாகேஸ்வர ரெட்டி, தோட்டா பிரசாத் ஆகியோர் கதை எழுத, விஷ்ணு மஞ்சு திரைக்கதை எழுதியிருக்கிறார். முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சித்தார்த் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். ஸ்டீபன் தேவசி இசையமைக்க, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். பிரபு தேவா மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார்.

2025 ஏப்ரல் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஜனவரி 18 ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இயக்குநர் முகேஷ் குமார் சிங் பேசுகையில்….

எங்கள் கண்ணப்பா படத்தின் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. மேடையில் இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள் என ‘கண்ணப்பா’ படக்குழுவினர் அனைவரும் கடவுள் சிவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக நான் கடவுள் சிவனால் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். அதனால், தான் என் முதல் படத்திலேயே இந்தியத் திரையுலகின் முன்னணிக் கலைஞர்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கண்ணப்பா பிரமாண்டமான திரைக் காவியம் மட்டும் அல்ல தற்போதைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு. நிச்சயம் படம் உங்களுக்குப் பிடிக்கும். நன்றி என்றார்.

படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசுகையில்….

மோகன் பாபு சார், விஷ்ணு சார் அனைவருக்கும் நன்றி. ‘கண்ணப்பா’ படத்திற்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்கள், படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. 100 பேருக்கும் மேற்பட்ட ஒரு பெரும் குழுவை நியூசிலாந்து நாட்டுக்கு அழைத்துச் சென்று இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். நான் ஒரு முறை அங்கு சென்றிருந்த போது, மூன்று கேமராக்கள் வைத்துக்கொண்டு விஷ்ணு சார் சில காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தார். மற்றொரு பக்கம் அதேபோல் மூன்று கேமராக்கள் வைத்துக் கொண்டு ஒரு குழு இருந்தது, அது யார்? என்று கேட்டேன், அதுவும் நம்ம படம் தான், மதுபாலா மேடம் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது, என்று விஷ்ணு சொன்னார். மற்றொரு பக்கம் மூன்று கேமராக்களுடன் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள், அங்கு என்ன நடக்கிறது? என்றால், சரத்குமார் சாரின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்றார். இப்படி மிகப்பெரிய குழுவுடன் ஏகப்பட்ட காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது, எடிட் செய்வதற்கும் சவாலாக இருக்கிறது. படம் சூப்பராக வந்திருக்கிறது. படத்தொகுப்பு செய்ய உதவிய இணை இயக்குநருக்கு நன்றி. படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேசுகையில்….

பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த விஷ்ணு சாருக்கு நன்றி. இந்தப் படத்தின் முக்கியமான ஒளிப்பதிவாளர் ஷெல்டன். அமெரிக்க ஒளிப்பதிவாளர் அவர். நான் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராகத் தான் பணியாற்றியிருக்கிறேன். விஷ்ணு சார் என் குடும்ப நபர் போன்றவர், அவர் தான் என்னைத் தெலுங்குத் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். விஷுவலாக படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. சண்டைக்காட்சிகளும் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. கண்ணப்பாவின் முக்கியமான கதை, அவர் யார்?, அவர் எப்படிப்பட்ட சிவ பக்தர் போன்றவற்றைத் தாண்டி, படத்தின் மற்ற அம்சங்கள் அனைத்தும் பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் வந்திருக்கிறது. விஷ்ணு சாருக்கு என் வாழ்த்துகள். பிரபு மாஸ்டர், சரத்குமார் சார் ஆகியோருடன் பணியாற்றியது மகிழ்ச்சி, நன்றி என்றார்.

நாயகி ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில்…..

அனைவருக்கும் வணக்கம், புது வருடத்தில் உங்களை தான் முதல் முறையாகச் சந்திக்கிறேன், அதுவும் ‘கண்ணப்பா’ போன்ற பிரமாண்டமான படத்திற்காகச் சந்திப்பது மகிழ்ச்சி. இவ்வளவு பெரிய படத்தில், இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பு கொடுத்ததற்காக நான் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். விஷ்ணு சார், மோகன் பாபு சார், இயக்குநருக்கு நன்றி. இந்தக் குழு ஒரு குடும்பம் போல் இருந்தது, என்னை ரொம்ப நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். இந்தப் படம் மூலம் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். நான் நடிப்பதற்காகத் தான் திரையுலகிற்கு வந்தேன், ஆனால் இந்தப் படத்தில் பணியாற்றும் போது, ஒரு காட்சிக்காக எவ்வளவு பேர் உழைக்கிறார்கள், ஒரு காட்சியை கூட்டு முயற்சியின் மூலம் எப்படி அழகாகக் கொண்டு வருகிறார்கள், என்பதைப் பார்த்து எனக்கு பிலிம் மேக்கிங் மீது ஃபேஷன் வந்துவிட்டது. இந்தப் படத்தில் கற்றுக்கொள்ள நிறைய இருந்தது. உண்மையாகவே படக்குழுவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களது பெரும் முயற்சியினால் படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது, நிச்சயம் படம் உங்களுக்குப் பிடிக்கும். நன்றி என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில்….

பத்திரிகை நண்பர்கள், ஊடக நண்பர்களுக்கு காலை வணக்கம். இந்தப் படத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் நிறையச் சொல்லலாம். பெங்களூரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இந்தக் காலகட்ட தலைமுறைக்குச் சரித்திரம், இதிகாசங்களை நினைவுபடுத்த வேண்டும், கண்ணப்பாவை ஒரு கதை என்று நினைக்கக் கூடாது, அது ஒரு வரலாறு, சரித்திரம், அதைப் பற்றி நிச்சயம் நாம் மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று இயக்குநர் சொன்னார். அது தான் இந்தப் படத்திற்கும், தற்போதைய தலைமுறையினருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். மோகன் பாபு சார், விஷ்ணு இருவருக்கும் வாழ்த்துகள், இந்த படத்தை உருவாக்கியதற்கு. கடுமையாக உழைத்திருக்கிறார்கள், உண்மையாக, நேர்மையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களது உண்மையான உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்க வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். கண்ணப்பா ஒரு வரிக் கதை தான், கண்ணப்பா யார் என்பது தெரியும், அவர் என்ன செய்தார் என்பது தெரியும். கண்ணப்பா தான் கண் தானத்திற்கு முதலில் வித்திட்டவர் என்று தொகுப்பாளினி சொன்னார்கள், அதுவும் உண்மை தானே. ஆனால் அதை எல்லாம் தாண்டி, கண்ணப்பா கதையை, உண்மை சரித்திரத்தை மிக பிரமாண்டமான முறையில் விஷ்ணு கொடுத்திருக்கிறார். இந்தப் படத்திற்காக விஷ்ணு நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறார். இந்தப் படத்திற்காக எதைச் செய்தாலும், அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் என்னை வியக்க வைத்தது. மிகப்பெரிய குழுவை நியூசிலாந்துக்கு அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்துவது என்பது சாதாரண விசயம் இல்லை. பொருளாதார ரீதியாகவும், மெனக்கெடல் ரீதியாகவும் சாதாரன விசயம் இல்லை, அதை விஷ்ணு மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். அதிகமான குளிர் இருந்தாலும் மேக்கப் போட்டு 7 மணிக்கு அனைவரும் படப்பிடிப்பில் பங்கேற்பது சாதாரண விசயம் இல்லை. சிவன் மீது பக்தி இருக்கிறதோ, இல்லையோ அவரைப் பற்றிய படத்தில் மிகவும் பயபக்தியுடன் ஒட்டுமொத்தப் படக்குழுவும் பணியாற்றினார்கள்.

என்னைப் பொறுத்தவரை பிரமாண்டம் ஒரு பக்கம், நடித்தவர்கள் அனைவரும் முன்னணில் கலைஞர்கள். அக்‌ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால், மோகன் பாபு சார் என பெரிய பெரிய நட்சத்திரங்கள் இருக்கும் படம்.அதே சமயம், பெரிய நட்சத்திரங்களுக்காக எடுக்கப்பட்ட படம் இல்லை, அந்தந்தக் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். இயக்குநர் முகேஷ் குமார் சிங் பிரமாண்டமாக படத்தை எடுத்திருக்கிறார். அவருக்கு இந்தி, ஆங்கிலம் தெரிகிறது, ஆனால் தெலுங்கு திரைப்படத்தை, பான் இந்தியா அளவில் கொண்டு செல்வதற்கான நுணுக்கங்களுடன் இந்தப் படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். முன்னணிக் கலைஞர்களுடன் பணியாற்றியது பெருமை என்கிறார், அவருடன் பணியாற்றியதை நானும் பெருமையாகக் கருதுகிறேன். படத்தொகுப்பாளர் ஆண்டனி, பிரபு தேவா ஆகியோருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ப்ரீத்தி முகுந்தன் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் அழகாக இருக்கிறார், இங்கேயும் அழகாக இருக்கிறார். மோகன் பாபு சார், விஷ்ணு அதிகமாக மெனக்கெட்டிருக்கிறார்கள். பிரபு தேவாவின் நடனக் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. மிகச் சிறப்பான படம், உணர்வோடு அனைவரும் நடித்திருக்கிறோம். ஏப்ரல் 25 ஆம் தேதி படம் வெளியாகிறது, படத்தைப் போல் வெற்றியும் பிரமாண்டமாக அமைய வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு விடைபெறுகிறேன், நன்றி என்றார்.

பிரபு தேவா பேசுகையில்….

இந்தப் படத்திற்காக மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறேன். மோகன்பாபு சார் எனக்கு போன் பண்ணி என்னை வர வேண்டும் என்று சொன்னார். நான் வரணுமா சார்? என்றேன், ”நீ வரலனா நான் உன் வீட்டுக்கு வந்துடுவேன்” என்றார். நானே வந்துட்றேன் சார், என்றேன். மூன்று பாடல்களிலும் நடனம் பெரிதாக இருக்காது, ஆனால் எமோஷனல் இருக்கும். அதேபோல் கிளைமாக்ஸ் பாடல் மிகவும் முக்கியமானது.அதில் நீ முக்கியமாக இருக்க வேண்டும் என்று சொன்னார். எனக்கும்,கிளைமாக்ஸில் பாடல் என்பது இது தான் முதல் முறை. அதேபோல் அதில் நடனத்தை விட எமோஷனலை கொண்டு வர வேண்டும் என்பது சவலாக இருந்தது.அதனால் பணியாற்றவும் ஆர்வமாகவும் இருந்தது. இயக்குநர் முகேஷ் குமார் சிங் என்றதும், அவர் இந்தி அவருக்கு எப்படி நமது கலாச்சாரம் தெரியும் என்று நான் யோசித்தேன்.ஆனால்,அவருக்கு சிவனைப் பற்றி நிறைய தெரிந்திருக்கிறது. எங்க அனைவரையும் விட அவருக்குத் தான் அதிகம் தெரிந்திருக்கிறது.இந்தப் படத்தை இயக்குவதற்கு அவர் தான் சரியான நபர்.சிறந்த இயக்குநர். அமெரிக்கன் ஒளிப்பதிவாளர் பணியாற்றியிருக்கிறார்.அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள்.விஷ்ணு எனக்கு தம்பி போல, மோகன் பாபு சார் எனக்கு பெரிய அண்ணன்.அவருக்கு என் வாழ்த்துகள்.படப்பிடிப்புத் தளத்தில் விஷ்ணு ஒரு தயாரிப்பாளர் போல் இருக்க மாட்டார்,ஒரு உதவி இயக்குநர் போல்,புரொடக்‌ஷன் உதவியாளர் போல தான் இருப்பார். தயாரிப்பாளர் பக்கம் நிற்காமல், தொழில்நுட்பக் கலைஞர்கள் பக்கம் இருப்பார் அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்.ப்ரீத்தி முகுந்தன் நன்றாக நடித்திருக்கிறார்,அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.ஒளிப்பதிவாளர் சித்தார்த் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்.அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் விஷ்ணு மஞ்சு பேசுகையில்….

அனைவருக்கும் வணக்கம், எனக்கு மீடியா முன்பு பேசுவதற்கு கொஞ்சம் தயக்கமாக இருக்கும். இது என் முதல் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சந்திப்பு பெருமையாக இருக்கிறது,கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது.நான் பிறந்து வளர்ந்தது சென்னையில் தான், தமிழ் நன்றாகப் பேசுவேன். ரொம்ப நாளாக தமிழ் பேசாததால் கொஞ்சம் பிழை இருக்கலாம்,மன்னித்துக் கொள்ளுங்கள். 15 வருடங்களுக்கு முன்பு நான் நடிகனாகத் தொடங்கினேன்.அன்று முதல் தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டேன், இன்று சிவன் அருளால் என் ஆசை நிறைவேறியிருக்கிறது. அதுவும் கண்ணப்பா மூலம் நிறைவேறியது பெருமையாக இருக்கிறது.

15 வருடங்களுக்கு முன்பு இருந்தே சரத்குமார் அங்கிளுடன் படம் பண்ண வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டு இருந்தேன்.இப்போது அது நடந்திருக்கிறது.என் அப்பா மீது உள்ள மரியாதை காரணமாகத் தான் அவர் நடித்தார்.காலையில் 7 மணிக்கு மேக்கப்போடு படப்பிடிப்பில் பங்கேற்போம் என்று அவர் சொன்னார்.அந்த நேரத்தை நிர்ணயம் செய்ததே அவர் தான்.அவர் நினைத்திருந்தால், அந்தக் கடும் குளிரில் 9 மணிக்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கலாம். ஆனால், அதைச் செய்யாமல் 7 மணிக்கு மேக்கப் உடன் படப்பிடிப்புத் தளத்துக்கு வருவார்.அவரைப் பார்த்து மற்ற கலைஞர்களும் அதே நேரத்திற்கு, சிலர் அதற்கு முன்பாகவும் வந்துவிடுவார்கள். அவருக்கு என் நன்றி.பிரபு அண்ணா, அவர் என் அப்பாவை அண்ணா என்று அழைப்பார்.நான் அவரை அண்ணா என்று அழைக்கிறேன். நான் சிறு வயதில் அவரது வீட்டுக்குச் சென்று நடனம் கூட கற்றுக் கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் அது குறைவாகத் தான் இருக்கும். அவர் நடன இயக்குநராகப் பணியாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நான் கேட்டுக்கொண்டதற்காக அவர் எங்கள் படத்தில் பணியாற்றினார். இரண்டு முறை நியூசிலாந்துக்கு அவர் வந்தார்.அவருக்கு நன்றி. படம் பார்த்தால் உங்களுக்கே புரியும், நான் பிரபு அண்ணா தான் நடனம் அமைக்க வேண்டும் என்று ஏன் முடிவு செய்தேன் என்று. இயக்குநர் முகேஷ் சார், படம் இயக்குவது இது தான் முதல் முறை. அவர் நிறைய டிவி தொடர்கள் இயக்கியிருக்கிறார். நான் பல முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றியிருக்கிறேன், முகேஷ் சார் உடனான என் உறவு ரொம்பவே ஸ்பெஷல். நான் படம் தொடர்பாக குழப்பமாக இருக்கும் போது எனக்கு பெரும் உதவியாக இருந்தார். படத்தொகுப்பாளர் ஆண்டனி, ’காக்க காக்க’ படம் பார்த்தது முதல் அவருடைய இரசிகனாகி விட்டேன்.அவர் ஒரு வாரத்தில் முழு படத்தையும் எடிட் செய்துவிடுவார், ஆனால் என் படத்தை ஒரு வருடமாக எடிட் செய்து கொண்டிருக்கிறார். கேமரா மேன் சித்தார்த், என் சகோதரர். அவர் எனக்காக இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தியை நாங்கள் தான் அறிமுகப்படுத்த இருந்தோம்.ஆனால் அதற்கு முன்பாகவே அவர் அறிமுகமாகி விட்டார். அவர் சிறப்பாக நடித்திருக்கிறார், நிச்சயம் பெரிய நடிகையாக வருவார். கண்ணப்பா பற்றி அனைவருக்கும் தெரிந்தது தான், நாங்கள் அதிகம் கஷ்டப்பட்டிருக்கிறோம், அனைவரும் கஷ்டப்பட்டுத் தான் படம் எடுக்கிறார்கள். கண்ணப்பா ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகிறது. நிச்சயம் படம் உங்களுக்குப் பிடிக்கும், எங்களுக்கு உங்கள் ஆதரவு வேண்டும் நன்றி

இவ்வாறு அவர் பேசினார்.

கண்ணப்பா படத்தை நியூசிலாந்தில் படமாக்கக் காரணம் என்ன? என்ற பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த விஷ்ணு மஞ்சு,

இந்தக் கேள்வியை நிறையப் பேர் கேட்கிறார்கள். கண்ணப்பா கதை 3 ஆவது நூற்றாண்டில் நடக்கிறது.அந்த காலக்கட்டத்தில் நீர், காற்று, வனம் என அனைத்தும் எவ்வளவு பசுமையாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். கண்ணப்பா கதையை என்னிடம் கொடுத்தவருக்கு தொடர்ந்து பணியாற்ற முடியாமல் போய்விட்டது. அதனால், நான் அந்தல் கதையை விரிவுபடுத்தி எழுதியதோடு, படப்பிடிப்புக்கான இடத்தைத் தேர்வு செய்யத் தொடங்கி விட்டேன். உலகின் பல நாடுகளுக்குச் சென்று பார்த்த போது, நியூசிலாந்து நாடு தான் சரியான இடமாக இருந்தது. கடவுள் வரைந்த கடைசி ஓவியம் என்றால் அது நியூசிலாந்து தான். நம் நாடும் ஒரு காலத்தில் அப்படித் தான் இருந்திருக்கும், ஆனால் நாம் அதை இப்போது கெடுத்து விட்டோம். கண்ணப்பா படத்தின் கதை அப்படி ஒரு இடத்தில் நடக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் அங்கு படப்பிடிப்பு நடத்தினேன்.படத்தில் நீங்கள் பார்க்கும் போது கிராபிக்ஸ் என்று நினைப்பீர்கள். ஆனால் உண்மையில் படத்தில் இடம்பெறும் லொக்கேஷன்கள் அனைத்தும் லைவானவை. அந்த அளவுக்கு நீர், வனம் என அனைத்தும் மிக அழகாக இருக்கும்.

கண்ணப்பா யார்? என்ற ஆரம்பக் கதையை காமிக்ஸாக படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு தொகுப்புகளாக இதுவரை 80 ஆயிரம் பிரதிகள் வெளியிட்டுள்ளோம்.விரைவில் மூன்றாவது தொகுப்பையும் வெளியிட இருக்கிறோம். கண்ணப்பா காமிக்ஸுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பு, நிச்சயம் படத்திற்கும் கிடைக்கும் என்று விஷ்ணு மஞ்சு தெரிவித்தார்.

Related Posts