விமர்சனம்

தருணம் – திரைப்பட விமர்சனம்

கமல் நடித்த பாபநாசம் படத்தின் மையத்தை எடுத்துக் கொண்டு அதற்கு வேறு வகையில் திரைக்கதை எழுதி எடுக்கப்பட்டிருக்கும் படம் தருணம்.

நாயகி ஸ்முருதிவெங்கட்டுக்கும் நாயகன் கிஷன் தாஸுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் நிலையில் நாயகியின் வீட்டுக்கு வரும் ராஜ் ஐயப்பா,எதிர்பாரா விதத்தில் இறந்துவிடுகிறார்.கொலைக் கணக்கில் சேரக்கூடிய அந்த மரணத்தை மறைக்க நாயகன் திட்டமிட்டு வேலை செய்கிறார்? அவர் என்ன செய்கிறார்? அதன் பின் என்ன நடக்கிறது? என்பதுதான் திரைக்கதை.

நாயகன் கிஷன் தாஸ்,சிஆர்பிஎஃப் எனப்படும் மத்திய சேம காவல்படை வீரர் வேடமேற்றிருக்கிறார்.அதற்கேற்ற உடலுறுதி மற்றும் மன உறுதியுடன் இருக்கிறார்.ஏராளமான த்டைகளைத் தாண்டி இறந்த உடலை அப்புறப்படுத்த அவர் செய்யும் வேலைகள் புத்திசாலித்தனமாக எழுதப்பட்டுள்ளன.அதற்கு வலுச்சேர்ர்கும் வகையில் நடித்திருக்கிறார்.

நாயகி ஸ்முருதி வெங்கட்,காதலோடும் கனிவோடும் இருப்பதைக் காட்டிலும் பயத்துடனும் பதட்டத்துடனும் இருக்கிற காட்சிகள் அதிகம்.எல்லா உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்துவிடுகிறார்.

எதிர்நாயகனாக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பாவின் மீது இரசிகர்களுக்குக் கோபம் வரவேண்டும்.அதை வரவழைக்கும் அளவுக்கு நடித்திருக்கிறார்.

நகைச்சுவைக்காக இருக்கும் நண்பர் பாலசரவணன், அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம் ஆகியோர் தங்கள் பணியை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி உழைப்பில் திரைக்கதையில் இருக்கும் பதற்றம் காட்சிகளிலும் நிறைந்திருக்கிறது.

தர்புகா சிவா இசையில் பாடல்கள் கேட்கலாம்.அஸ்வின் ஹேமந்த்தின் பின்னணி இசை அளவாக அமைந்திருக்கிறது.

அருள் இ சித்தார்த்தின் படத்தொகுப்பு படம் தொய்வின்றி நகர உதவி செய்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் அரவிந்த் சீனிவாசன்.இக்கால இளையோரின் உறவு நிலைகள் அவற்றிலுள்ள நல்லன மற்றும் அல்லனவைகளைச் சுட்டியிருக்கிறார்.அவற்றை அழுத்தமாகப் பதிய வைக்க ஒரு கொலை அதன் பின்னான நிலை ஆகியனவற்றை இதுவரை பார்க்காத வகையில் புதிதாகக் கொடுக்க முயன்றிருக்கிறார்.

சிற்சில பலவீனங்களைத் தாண்டி இரசித்துப் பார்க்கும் பல தருணங்களைக் கொண்டிருக்கிறது இப்படம்.

– இளையவன்

Related Posts