சினிமா செய்திகள்

வியக்க வைக்கும் வீர தீர சூரன் வியாபாரம் – விவரம்

விக்ரம் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் வீரதீரசூரன். விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி,சிந்துபாத் ஆகிய படங்களையும் சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தையும் இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

விக்ரமின் 62 ஆவது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இந்நிலையில், இப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.படத்தொகுப்பை பிரசன்னா கவனிக்கிறார்.

இந்தப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகவிருக்கிறது. இதுவரை இல்லாத மாதிரி படத்தின் இரண்டாம்பாகத்தை முதலில் வெளியிடுவதென்றும் முதல் பாகத்தை இரண்டவதாக வெளியிடுவதென்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மதுரையைக் கதைக்களமாகக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 21 ஆம் தேதி மதுரையில் தொடங்கியது.அப்போது முதல் விட்டு விட்டு நடந்த படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டது.இப்போது படப்பிடிப்புக்குப் பிறகான பணிகள் நடந்து வருகின்றன.

ஏற்கெனவே, இப்படம் குறித்த அறிமுகக் காணொலி முதல்பார்வை புகைப்படம் மற்றும் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு காணொலி ஆகியனவற்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படம் முழுமையாகத் தயாராகுமுன்பே இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமை விற்பனை ஆகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை ஃபைவ் ஸ்டார் செந்தில் பெற்றிருக்கிறார்.எம் ஜி எனப்படும் குறைந்தபட்ச பாதுகாப்பு வியாபார முறை அடிப்படையில் சுமார் 21 கோடி கொடுத்து இந்த உரிமையை அவர் பெற்றிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதற்கடுத்த வியப்பாக இப்படத்தின் இணைய ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனை நடந்திருக்கிறது.

இதிலென்ன வியப்பு?

இப்போது எந்தப் படமுமே வெளியீட்டுக்கு முன் வியாபாரம் ஆவதில்லை என்பதைப் பொய்யாக்கி இந்தப்பட வியாபாரம் நடந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி அதன் விலையும் ஆச்சரியப்பட வைக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.

இவ்விரண்டு ஒளிபரப்பு உரிமை விலை சுமார் அறுபது கோடி என்கிறார்கள்.இது திரையுலகினரிடையே ஆச்சரியத்தையும் படக்குழுவினரிடம் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இப்போது நடந்த வியாபாரத்தின்படி சுமார் எண்பத்தியொரு கோடி கிடைத்திருக்கிறது.இன்னும் பல வியாபாரங்கள் இருக்கின்றன.அவற்றையெல்லாம் சேர்த்தால் சுமார் நூற்றுப்பத்து அல்லது நூற்றிருபது கோடி வரை வரும் என்று சொல்கிறார்கள்.

இதனால் இப்போதே இப்படத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.

Related Posts