சினிமா செய்திகள்

ஷங்கரின் கேம்சேஞ்சர் – தமிழ்நாடு வியாபாரத்தில் அதிரடி மாற்றம்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில்,தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. இதில் கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார்.இவர்களோடு அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு படத்தைத் தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இவ்வாண்டு ஜூலையில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

படப்பிடிப்புக்குப் பிறகான பணிகளுக்குப் பிறகு படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தின் பணிகள் நிறைவு பெறாததால் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நாளில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘விஸ்வம்பரா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தந்தை – மகன் இருவரின் திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில்,இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியிட்டு உரிமையைப் பெற்றிருப்பது யார்? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமை பெற ராக்போர்ட் முருகானந்தம் முயன்று கொண்டிருந்தார்.அவர் எம்ஜி எனப்படும் குறைந்தபட்ச பாதுகாப்பு அடிப்படையில் சுமார் இருபது கோடி கொடுக்க முன்வந்தாராம்.ஆனால் தயாரிப்பு நிறுவனத்தின் எதிர்பார்ப்பு 25 கோடியாக இருந்ததெனச் சொல்லப்பட்டது.

இப்படி ஒரு பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும்போதே இன்னொரு பக்கம் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை சத்யம் ஸ்வரூப்ரெட்டிக்கு டிஸ்டிரிபியூசன் எனும் விநியோக அடிப்படையில் கொடுத்துவிட்டாராம் தயாரிப்பாளர் தில்ராஜு.

இதற்காக முன் தொகைகூடப் பெற்றுக் கொள்ளாமல் படத்தின் உரிமையைக் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சத்யம் ஸ்வரூப்ரெட்டி, சென்னை செங்கல்பட்டு ஆகிய விநியோகப்பகுதிகளுக்கு சத்யம் கிஷோர், தென்னாற்காடு பகுதிக்கு ஃஃபைவ்ஸ்டார் செந்தில், வட ஆற்காடு பகுதிக்கு எஸ் பிக்சர்ஸ் சீனு,கோவைக்கு மன்னார்,சேலம் மற்றும் மதுரை பகுதிக்கு அழகர்,திருச்சிக்கு நாராயணசாமி,திருநெல்வேலிக்கு பிரதாப் ஆகியோருக்கு விநியோக உரிமை கொடுத்திருக்கிறாராம்.

குறைந்தபட்சப் பாதுகாப்புத் தொகை எதிர்பார்த்த அளவு கிடைக்காததால்,படத்தைத் திரையிடுவோம் அதில் என்ன வருகிறதோ? அவற்றைப் பங்கிட்டுக் கொள்வோம் என்கிற எண்ணத்தின் காரணமாக இந்த முடிவை தயாரிப்பாளர் எடுத்தார் என்று சொல்லப்படுகிறது.

Related Posts