சினிமாவில் இடைவெளி – அஜீத் முடிவு
நடிகர் அஜீத் இப்போது ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.இதற்கு முன்னதாக மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது என்று சொல்லப்பட்டாலும் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டிய நிலையில் இருப்பதாகச் சொல்கின்றனர்.
விடாமுயற்சி படம் 2025 சனவரி மாதம் பொ்ங்கலையொட்டி வெளியாகும் என்றும்,அதே பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் குட்பேட்அக்லி 2025 கோடை விடுமுறையில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
குட்பேட்அக்லி படத்துக்குப் பிறகு அஜீத் நடிக்கவிருக்கும் படம் குறித்து எவ்விதத் தகவலும் இல்லை.
இந்நிலையில்,அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐரோப்பியன் கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதுமட்டுமல்லாமல், `அஜித் குமார் ரேஸிங்’ என்ற ரேஸிங் குழு ஒன்றையும் தொடங்கியிருக்கிறார் அஜித்.ஏற்கெனவே `ஃபார்முலா பி.எம்.டபுள்யூ ஆசியா’, `பிரிட்டீஷ் ஃபார்முலா 3′ போன்ற கார் பந்தயங்களில் அஜித் பங்கேற்றிருக்கிறார்.
ரேஸிங் மீது ஆர்வம் கொண்டிருக்கும் அஜித் தற்போது, `வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ்’ என்ற நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
அடுத்த ஆண்டு ரேஸில் களமிறங்கும் அஜித்துக்கு அவரின் மனைவி ஷாலினி ஒரு வாழ்த்துப் பதிவை வெளியிட்டிருக்கிறார்.அதில் அவர், ரேஸிங் டிரைவராக உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி.உங்களுக்குப் பிடித்ததை செய்து கொண்டிருக்கிறீர்கள்.பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான ரேஸிங் பயணத்துக்கு உங்களுக்கும் உங்கள் அணிக்கும் வாழ்த்துகள் என பதிவிட்டிருக்கிறார்.
இதனால் குட்பேட்அக்லி படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு கார் பந்தயத்தில் கவனம் செலுத்தவிருக்கிறார் அஜீத் என்பது உறுதியாகியிருக்கிறது.
அதனால் அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்து எந்த முடிவையும் அவர் எடுக்காமல் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
சுமார் ஆறு மாதங்கள் கார் பந்தய வேலைகளில் இருக்கும் அஜீத் அதன்பின் ஆறு மாதங்கள் தம் குடும்பத்துடன் இருப்பது என்று முடிவெடுத்திருக்கிறாராம்.வரிசையாகப் படப்பிடிப்புகள் இடையிடையே பைக் பயணம்,இப்போது கார் பந்தயம் என பரபரப்பாகவே இருக்கிறார்.இதனால் குடும்பத்துடன் அவர் நேரம் செலவிடுவதே இல்லை என்றும் அதனால் குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதனால் திரைத்துறைக்கு ஒராண்டு இடைவெளி விட முடிவு செய்திருக்கிறார்.எனவேதான் அடுத்த படம் குறித்து கவனம் செலுத்தாமல் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.











