பார்வதி நாயர் செய்த கொடுமை கேஜேஆர் செய்த துரோகம் – கொந்தளிக்கும் சுபாஷ்
அஜீத்தின்’என்னை அறிந்தால்’,கமலின் ‘உத்தம வில்லன்’, உதயநிதியின் ‘நிமிர்’ அண்மையில் வெளியான விஜய்யின் தி கோட் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை பார்வதி நாயர்.இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள பகுதியில் வசித்து வருகிறார்.
இவர், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தனது வீட்டில் விலை மதிப்புள்ள மடிக் கணினி, செல்போன், 2 கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.அந்தப் பொருட்களை தனது வீட்டில் இரண்டு வருடங்களாகப் பணிபுரிந்து வந்த சுபாஷ் திருடிச் சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.அதனடிப்படையில் சுபாஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, பார்வதி நாயர் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சுபாஷ். மேலும் அவர் வேலை செய்யும் போது தன்னை துன்புறுத்தியதாகவும், தான் தங்கியிருந்த அறைக்கு வந்து பார்வதி நாயர், உள்ளிட்ட அவரது உதவியாளர்கள் 7 பேர் தன்னைத் தாக்கியதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது சம்பவத்தில் ஈடுபட்ட பார்வதி நாயர் உள்ளிட்ட அவரது உதவியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி பார்வதி நாயர் மற்றும் தயாரிப்பாளர் கோட்டப்பாடி ராஜேஷ், இளங்கோவன் செந்தில், அருண் முருகன், அஜித் பாஸ்கர் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் பார்வதி நாயருக்கு எதிராகப் புகார் கொடுத்து அதுசம்பந்தமாகப் போராடிக் கொண்டிருக்கும் சுபாஷிடம் பேசினோம்.
1.உங்களைப் பற்றிய அறிமுகம்?
என் பெயர் சுபாஷ்சந்திரபோஸ்.புதுக்கோட்டையிலுள்ள எல்லைப்பட்டி என்கிற கிராமத்தைச் சேர்ந்தவன்.சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தேன்.வந்து ஏழாண்டுகள் ஆகின்றன.
2.பார்வதி நாயரிடம் வேலைக்கு சேர்ந்தது எப்போது? என்ன வேலை?
2020 ஜூன் 17 ஆம் தேதி கேஜேஆர் ஆபிசில் வேலைக்கு சேர்ந்தேன்.அங்கு அலுவலக உதவியாளர் மற்றும் பார்வதி நாயர் நடிக்கும் ரூபம் படத்தின் உதவி இயக்குநராகவும் வேலை செய்தேன்.ப்ரீ புரொடக்சன் வேலை செய்தேன்.ஜூலை 2020 பார்வதி நாயரை அறிமுகப்படுத்தினார்கள்.எனக்கு வீடியோ எடுக்கவும் வீடியோ எடிட்டிங்கும் தெரியும் என்பதால் அவருக்காக வேலை செய்யச்சொன்னார்கள்.நானும் அந்த வேலைகளைச் செய்துகொண்டிருந்தேன்.
3.உங்களுக்குள் பிரச்சினை வந்தது எப்போது? ஏன்?
ஒரு சமயம் எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது.அதனால் அவர்களிடம் லீவ் கேட்டேன்.ஏற்கெனவே கேஜேஆரிடம் சொல்லிவிட்டேன்.உங்களிடமும் சொல்கிறேன் என்று சொன்னேன்.அப்ப அவங்க நீங்க என்ன சாதி? எனக்கேட்டாங்க.நானும் நான் எஸ்சி என்று சொன்னேன்.நீங்க எஸ்சியா என முகம் சுளிச்சாங்க.அதற்குப் பிறகு என்னிடம் அவங்க நடந்துகிட்ட முறை முற்றிலும் மாறிவிட்டது.அதைத் தொடக்கூடாது இதைத் தொடக்கூடாது,இங்கே நிற்கக் கூடாது அங்கே வரக்கூடாது என்றெல்லாம் சொல்லத் தொடங்கிட்டாங்க.அது எனக்கு சங்கடமா இருந்தது.அதனால் அவங்க முகத்துக்கு நேரே என்னிடம் இப்படி நடந்து கொள்கிறீர்கள் இது சரியில்லை எனக்குப் பிடிக்காது என்று சொல்லிவிட்டேன்.அதை அவர்களால் தாங்கவே முடியவில்லை. ஒரு வேலைக்காரன் நீ என்னை எதிர்த்துப் பேசுவதா?என்று கொந்தளிச்சாங்க. அதுக்கப்புறம் நான் சினிமா இண்டஸ்டிரியிலயே இருக்கக்கூடாது என்று சொல்லி அதற்காக என மேல் பொய்யான திருட்டு கேஸ் கொடுத்தாங்க.நுங்கம்பாக்கம் போலிஸ் ஸ்டேசன்ல கேஸ் கொடுத்தாங்க.முதல் கேஸ் 304/2022.செக்சன் 381. அதில், ஒன்றரை வருசம் எதுவுமே செய்யாம இருந்தாங்க.நானே உயர்நீதிமன்றத்தை அணுகி அந்த வழக்கை முடிக்கச் சொல்லி முறையிட்டேன்.
4.திருட்டு வழக்கில் உங்களைக் கைது செய்தார்களே, அந்த வழக்கின் நிலை என்ன?
அந்த வழக்கில் நான் ரிமாண்டும் ஆகல,திருட்டுப் போனது என்று சொன்ன பொருட்களோட விவரத்தைக் கூட பார்வதி நாயர் கொடுக்கல.அதனால் சம்பந்தப்பட்ட போலீஸ் உட்பட எல்லோர் பற்றியும் நான் புகார் கொடுத்தேன்.அந்த விசாரணையில் அந்த கேஸ் முடிந்துவிட்டது.அவர் எதுவும் திருடவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.
அதன்பின்,இரண்டாவதாக ஒரு கேஸ் கொடுக்கிறாங்க.அதில் திருடப்பட்ட கருவிகளில் இருந்த கண்டெண்டை நான் ரிலீஸ் செய்துவிட்டேன் என்று கேஸ் கொடுத்தாங்க.நான் திருடவே இல்லை என்று முடிவான பின்பு இந்த கேஸை கொடுக்கிறாங்க.இந்த கேஸ்ல நானே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டேன் என்று கேஜேஆர் பிரஸ்மீட்ல சொன்னாரு.அப்படிக் காட்டிய ஒப்புதல் வாக்குமூலத்துல என்னோட கையெழுத்தே இல்ல.
5.உங்கள் திருமணம் நின்று போனது ஏன்?
பார்வதி நாயர் என் மேல் கேஸ் கொடுத்துட்டு சுபாஷ் அப்படிப் பண்ணிட்டான் இப்படிப் பண்ணிட்டான்னு பேட்டி கொடுத்ததால என்னோட திருமணம் நின்னு போச்சு.இப்போ வரைக்கும் எனக்கு பெண் கிடைக்கல.
6.உங்கள் மீதான புகாருக்கும் இப்போது இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததற்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தவை பற்றி?
26.10.22 இல் நான் பார்வதி நாயர் மேல் ஒரு கம்ளெயிண்ட் கொடுக்கிறேன்.அன்னைக்கு இரவே நான் தங்கியிருந்த இடத்துக்கு வந்து என்ன அடிக்கிறாங்க,பார்வதி நாயர் என் மேல் எச்சில் துப்பிவிட்டு ஆஃப்டர் ஆல் நீ ஷெட்யூல் காஸ்ட் நாயி நீ என்னையே எதிர்க்கிறியா? என்று சொல்லிகிட்டே, கில் ஹிம்னு கத்தறாங்க.
உடனே நான் போலீஸ் ஸ்டேசன்ல போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்தேன் அவங்க எடுக்கல.அதனால் கமிஷன்ர் ஆபிஸ்ல போய் கம்ளெயிண்ட் கொடுத்தேன்.மூணாவது நாள் சிஎஸ் ஆர் போடறாங்க.அப்புறம் அவங்க ஆறு பேரும் மன்னிப்பு கேட்டாங்கன்னு சொல்லி கேஸ முடிச்சாங்க.ஆனா அப்படி நாங்க சொல்லவே இல்லைன்னு கோர்ட்ல சொல்றாங்க.இதுல போலீஸ் அதிகாரி சீட்டிங் பண்ணியிருக்காங்கன்னு தெரிஞ்சது.அத நிரூபிச்சி சைதாப்பேட்டை மாவட்ட கோர்ட்ல எஃப் ஐ ஆர் ஆர்டர் வாங்கினேன்.முப்பது நாளாகியும் ஆக்சன் எடுக்கல.அவங்க இந்த வழக்கை தள்ளுபடி செய்யச் சொல்லி உயர்நீதிமன்றத்துக்கு போனாங்க.ஆனா அங்கேய்யும் என் புகார் சரி என்று சொல்லி அதன் மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாங்க.அந்த ஆர்டர் வந்து இருபது நாளாகியும் நடவடிக்கை எடுக்கல. கோர்ட் ஆர்டர செயல்படுத்தலன்னு சொல்லி கமிஷனர் அருண் சாரை நேரடியாப் பார்த்து சொன்னேன்.அதன்பின் ரெண்டு நாள்ல எஃப் ஐ ஆர் பைல் பண்ணிட்டாங்க.
7. நான்கு நீதிமன்றங்களில் வழக்குகள். எப்படி சமாளிக்கிறீர்கள்? செலவுக்கு என்ன செய்கிறீர்கள்?
என்னோட அட்வகேட்ஸ் பெர்சியல் பெரிகல்ஸ்,,பிரியதரிஷினி,அப்துல்கான்,பவித்ரன் சங்கர் ஆகிய நான்குபேர்.அவங்களுக்கு என்னிடம் பணம் இல்லைன்னு தெரிஞ்சும் எனக்கு நீதி கிடைக்கணும்னு பாடுபடறாங்க.சாமானியனுக்கு நீதி கிடைக்கணும்னு நினைக்கிற அட்வகேட்ஸ் எனக்குக் கிடைச்சது ரொம்பப் பெரிய விசயம்.
அவங்களாலதான் எக்மோர்,சைதாப்பேட்டை,சிட்டி சிவில் கோர்ட்,ஹைகோர்ட் என நான்கு கோர்ட்களிலும் போராடமுடிகிறது.அவங்களுக்கு நான் போக்குவரத்து செலவுக்குக் கூட பணம் கொடுக்கல.ஆனாலும் எனக்கு நீதி கிடைக்கணும்னு போராடுறாங்க.
என்னோட தங்குமிடம் மற்றும் உணவுச் செல்வுக்கு நான் முன்பு பணியாற்றிய தயாரிப்பாளர் அடிதடி முருகன் உதவி செய்கிறார்.உன்னைப் பத்தி எனக்குத் தெரியும் அதனால் நான் பாத்துக்குறேன் என்று மனிதநேயத்தோடு உதவி செய்கிறார்.
கேஜேஆர் எனக்குத் துரோகம் பண்ணினார்.ஆனால் இவர் அருமையான கேரக்டர்.மனிதநேயமிக்கவர்,என் மீதான நம்பிக்கையில் எனக்கு உதவி செய்கிறார்.
8.இவ்வளவு கஷ்டப்பட்டு சண்டை போடுவது ஏன்?
பணபலம் அரசியல் பலம் அதிகார பலம் படைச்சவங்களை எதிர்த்து இவ்வளவு கஷ்டப்பட்ட்டு சண்டை போடக் காரணம்,எனக்கு நீதி வேண்டும் என்பது மட்டுமின்றி எனக்கு நடந்த மாதிரி இவனால என்ன செய்யமுடியும்ணு நெனச்சி இன்னொருவருக்கு இந்த மாதிரி நடந்துவிட்வே கூடாது என்பதுதான்.இல்லாதப்பட்டவன தாழ்த்தப்பட்டவன என்ன வேணா செய்யலாம்னு தான் இப்படிச் செஞ்சாங்க.இந்த எண்ணத்தை உடைக்கணும்னுதான் நான் போராடினேன்.நான் நீதிமன்றத்தை நம்பினேன்.எனக்கு நல்லது நடக்கும்.
9. கேஜேஆர் இதுகுறித்துப் பேசினாரா? அவர் உங்களுக்கு ஆதரவு தரவில்லையா? ஏன்?
கேஜேஆர் எனக்கு எந்த வகையிலும் உதவி செய்யல.எனக்கு எதிராதான் வேலை செஞ்சார்.என் மேல் இத்தனை பொய் கேஸ் வர்றதுக்கும் அவர் காரணமா இருந்தார்.பார்வதி நாயருக்காக அவரோட அட்வகேட்ஸ் தான் வர்றாங்க.ஆனா அவங்க செஞ்சது எல்லாம் அவங்களுக்கு எதிராவே மாறிவிட்டன.
10. உங்களிடம் சமாதானம் பேசினார்களா? உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
பலமுறை என்னிடம் சமாதானம் பேச வந்தாங்க.எனக்கு பார்வதிநாயரை தண்டிக்கணும்கிற எண்ணமெல்லாம் இல்லை.அவங்க திருந்தணும்.இனிமேல் யாரிடமும் அவங்க இப்படி நடந்துக்கக்கூடாது என்பதுதான் என் எண்ணம்.
– அழகு













