சினிமா செய்திகள்

பாண்டிராஜ் விஜய்சேதுபதி இணையும் படம் – சம்பள விவரங்கள்

தற்போது கைவசம் இருக்கும் ஏஸ்,டிரெயின் ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் விஜய்சேதுபதி. அவற்றைத் தொடர்ந்து அவர் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அவற்றில் ஒன்று தெலுங்கு இயக்குநர் ராம்கோபால்வர்மா இயக்கும் படம்.இன்னொன்று பாண்டிராஜ் இயக்கும் படம் என்று சொல்லப்படுகிறது.

இவற்றில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இவர்கள் இருவரும் இணையும் இப்படத்தை ஏற்கெனவே வேறொரு நிறுவனம் தயாரிக்கவிருந்தது.அப்போது இவர்கள் கேட்ட சம்பளம் ஒத்துவராததால் அது நடக்கவில்லை என்றார்கள்.அப்போது விஜய்சேதுபதி சுமார் இருபது கோடி சம்பளம் கேட்டார் என்றும் இயக்குநர் பாண்டிராஜ் சுமார் எட்டுகோடி சம்பளம் கேட்டார் என்றும் சொல்லப்பட்டது.

இப்போது இங்கே அதே சம்பளம் தருகிறார்களா? என்றால் இல்லை என்கிறார்கள்.

இங்கு விஜய்சேதுபதிக்கு சுமார் பனிரெண்டு கோடி சம்பளம் என்று சொல்லப்படுகிறது.அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார் என்று சொல்கிறார்கள்.இந்த நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறோம் என்பதற்காக அவர் ஒப்புக்கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.

அதேபோல், இயக்குநர் பாண்டிராஜுக்கு நான்கு கோடி சம்பளம் என்று தயாரிப்புத் தரப்பில் சொல்லப்பட்டதாகவும் அவர் ஐந்து கோடி வேண்டும் என்று கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. இப்போது அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.

இருவர் சம்பளம் உட்பட மொத்தமாக முப்பத்தைந்து கோடி செலவில் இந்தப்படத்தை முடிக்க வேண்டும் என்றும் பேச்சுகள் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.

இப்பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் போது இயக்குநரின் சம்பளமும் முடிவாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.

இயக்குநரும் கதாநாயகரும் இணைந்து தயாரிப்பு நிறுவனமும் சரியாக அமைந்துவிட்டது.

இதற்கடுத்ததாக இப்படத்தில் நாயகியாக நித்யா மேனனை நடிக்க வைப்பது என்றும் முடிவெடுத்திருக்கிறார்கள். அவரோடும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அவர் பெரும்பாலும் ஒப்புக்கொள்வார்.இதனால் முதன்முறையாக விஜய்சேதுபதியும் நித்யாமேனனும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள்.

ஒரு குடும்பம், ஒரு திருவிழா அங்கு நடக்கும் நிகழ்வுகள் எனப் போகும் கதையில், விஜய்சேதுபதியும் நித்யாமேனனும் மிகவும் பொருத்தமாக இருப்பார்கள் என்பதால் இது நிச்சய வெற்றிப் படமாக அமையும் என்று நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.

Related Posts