இன்னும் 15 நாட்களில் விஷாலுக்கு தண்டனை?
நடிகர் விஷாலின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம், நிதியாளர் அன்புச்செழியனிடம் வாங்கிய 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.
அந்தத் தொகையைச் சொன்னபடி லைகா நிறுவனத்துக்குத் திருப்பித் தரவில்லை.அதோடு அந்நிறுவனம் தயாரிக்கும் படங்களின் வெளியீட்டு உரிமையைத் தருவதாகச் சொல்லி அதையும் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்தக் காரணங்களால், நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2021 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
பலமுறை தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது இவ்வழக்கு.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி 15 கோடி ரூபாயை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யவும், சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யவும் நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதிசெய்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, லைகாவிற்கும் விஷாலுக்கும் இடையே உள்ள பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு சமரச அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று கோரினார்.
இதற்கு பதிலளித்த லைகா நிறுவனம் தரப்பு வழக்கறிஞர் ஹேமா சீனிவாசன், சமரசத்திற்கு தயார் என்று விஷால் தரப்பு கூறினாலும் ஆக்கப்பூர்வமாக எதையும் முன்னெடுக்கவில்லை என்றார்.
இதையடுத்து, இறுதி விசாரணைக்காக வழக்கை ஜூன் 28 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
அந்தத் தேதிக்கு இன்னும் 15 நாட்கள் இருக்கின்றன.அதற்குள் விஷால் லைகா நிறுவனத்திடம் சமரசம் செய்து கொள்ளவில்லையென்றால் இறுதி விசாரணை முடிவில் அவருக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்கிறார்கள்.











