சில்லுனு ஒரு காதல் 2 – கவின் நடிக்கிறார்
சூர்யா,ஜோதிகா,பூமிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் சில்லுனு ஒரு காதல்.2006 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. அறிமுக இயக்குநர் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.
அப்படத்துக்குப் பிறகு நெடுஞ்சாலை, பத்துதல ஆகிய தமிழ்ப்படங்களையும் தெலுங்கில் ஒரு படத்தையும் இயக்கியிருந்தார் இயக்குநர் கிருஷ்ணா.
இந்நிலையில்,தற்போது பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் கிருஷ்ணா ஒரு படத்தை இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மே 30 ஆம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், இப்படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் குழுவினர் நடிகர் நடிகைகள் பற்றி விரைவில் அறிவிப்போம் என்றும் சொல்லியிருந்தனர்.
இப்படம், இயக்குநர் கிருஷ்ணா இயக்கிய முதல்படமான சில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாம்பாகமாக உருவாகவிருக்கிறதாம்.அதில் சூர்யாவையே நடிக்க வைக்கலாம் என்றால் அவருடைய இப்போதைய பிம்பத்துக்கு இந்தப்படம் குறைவாக இருக்கும் என்று கருதி அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டார்களாம்.
அதன்பின், இந்தப்படத்துக்காக இயக்குநர் கிருஷ்ணா தேர்வு செய்திருக்கும் நடிகர் கவின்.
அவரிடம் இந்தக் கதையைச் சொல்லிவிட்டார்களாம். அவருக்கும் இப்படத்தில் நடிப்பதில் விருப்பம்.
அதன்பின் சம்பள விசயத்தில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. கவின் கேட்ட சம்பளத்தைக் கொடுத்து படமெடுத்தால் அந்த அளவு வியாபாரம் இருக்குமா? என்கிற ஐயம் தயாரிப்பு நிறுவனத்துக்கு.எனவே அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றனவாம்.
விரைவில் அவை நல்லபடியாக நிறைவடைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
இப்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் கிஸ், நெல்சன் தயாரிப்பில் பிளடி பெக்கர், வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் கவின்.
இவை தவிர நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் படம் குறித்த பேச்சுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
இப்போது அவருக்கு இந்தப்படம் அமைந்திருக்கிறது.
சில்லுனு ஒரு காதல் படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படமாக அமைந்தது. அதேபோல் அதன் இரண்டாம் பாகம் நடிகர் கவினுடைய திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமையும் என்று என்று சம்பந்தப்பட்ட அனைவரும் நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.
நல்லதே நடக்கட்டும்.











